Saturday, August 10, 2024

வினா விடை: "குருவருளால் தழைக்கும் கற்பகத் தருக்கள்!" கட்டுரை

கட்டுரைக்கு ஒரு சிறு அறிமுகம்

அடியேனின் சிறு பதிவுகளை வாசித்து வரும் அன்பர்களுள் ஒரு அடியவர் ஸ்ரீ கௌடியா சம்பிரதாயத்தில் ஊற்றம் உள்ள ஸ்ரீ க்ருஷ்ண பக்தர். அவர் சென்ற இரு பதிவுகளைப் படித்து, அவற்றை அசை போட்டு [!], சில கேள்விகளைத் தொடுத்தார். இந்தக் கேள்விகளில் உள்ள நேர்மையும், தன்னையே அந்த வரலாற்றுச் சூழலில் வைத்துப் பார்த்து அந்த ஆசாரியரின் / அடியவரின் மனோபாவத்தைப் புரிந்துகொள்ள மனதார முயல்வதும் உண்மையிலேயே அடியேனை மிகவும் கவர்ந்தன. அவரது கேள்விகள் பல இடங்களில் பல ஆழ்பொருள்களை நினைவூட்டும் வகையிலும் இருந்தன! இதனால், கட்டுரை வடிவமாகவே அக்கேள்விகளுக்கு [அடியேனின் சிற்றறிவிற்கு எட்டிய வரை!] விடைகள் அளித்துள்ளேன்.

இந்தப் பதிவில் உள்ள கேள்விகள் குருவருளால் தழைக்கும் கற்பகத் தருக்கள்! என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கட்டுரையைப் பற்றியவை.




கேள்விகளுக்கு ஒரு சிறு முன்னுரை

ஹரி ஹரி. திருவரங்கத்திலிருந்து திருவநந்தபுரம் வரை ஒரு இனிமையான பயணத்தை ரசித்து அனுபவித்தேன். இந்த உயர்ந்த அடியார்கள் சற்றும் அசராத நம்பிக்கையை தங்கள் குருமார்கள் மீது எப்படி வைத்திருக்கிறார்கள்! இதை மேலோட்டமாகக் கூட அடியேனால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நினைக்கும் போது வருந்துகிறேன்.

எனது சிற்றறிவிற்கு எட்டிய சில கேள்விகள்:




கேள்வி # 1:

ஸ்ரீமந் நாதமுனிகள் ஒரு உயர்ந்த ஆசாரியர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இருந்தும், ஸ்ரீ உய்யக்கொண்டாரால் அவரது வாழ்நாளில் ஸ்ரீ ஆளவந்தாரைக் காண முடியாது என்று ஸ்ரீமந் நாதமுனிகள் ஏன் முதலிலேயே தெரிவிக்கவில்லை? அந்தோ ஸ்ரீ உய்யக்கொண்டார் ஸ்ரீ ஆளவந்தாரைக் காணும் முன்னரே வைகுந்தம் புகும் படி ஆனது! அவரது சீடர் ஸ்ரீ மணக்கால் நம்பிகள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எனினும், ஸ்ரீ மணக்கால் நம்பிகள் நல்ல திறமையாளர் என ஸ்ரீ ஆளவந்தாரைத் திருத்த அவர் மேற்கொண்ட அணுகுமுறையிலேயே அறியலாம்!

விடை # 1:

தாங்கள் கூறியது போல, ஸ்ரீமந் நாதமுனிகள் அனைத்தும் அறிந்த ஆசாரியர் என்பது உண்மையே. ஸ்ரீ உய்யக்கொண்டாருக்கு அவ்வாறு கட்டளையிட்டது, "அந்தக் கட்டளையை ஸ்ரீ உய்யக்கொண்டார் மட்டுமே நிறைவேற்ற வேண்டும்," என்ற நோக்கத்தில் அல்ல. அந்தக் கட்டளை நிறைவேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் அதை அருளினார்.

சீடர்கள் தத்தம் ஆசாரியருடைய திருவடிகளாகவே தங்களைப் பாவித்து கொள்கிறார்கள். ஆகையால், எந்த ஒரு சீடருமே அவர்கள் செய்த எந்த ஒரு தொண்டையும் தாங்கள் செய்ததாக நினைத்துக் கொண்டதே இல்லை. ஒருவருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்யும்போது கூட, ஒவ்வொரு ஆசாரியரும், "இதை அடியேன் செய்யவில்லை. அடியேனைத் தமது திருக்கையாகக் கொண்டு அடியேனது ஆசாரியரே இதைச் செய்கிறார்," என்ற நினைவோடு மட்டுமே செய்யவேண்டும் என்பது நியதி. ஞானத்தில் முதிர்ந்த ஆசாரியர்கள் நூல்கள் அருளும்போதும், தங்களை ஒரு எழுத்தாணியாக நினைத்துக்கொண்டு, தங்கள் ஆசாரியரே அந்த நூலை அருள்பவர் என்ற நினைவையே பற்றிக்கொண்டு நூல்களை அருள்வர். அதனால், ஸ்ரீ மணக்கால் நம்பிகளும் தம்மை ஸ்ரீ உய்யக்கொண்டாரின் திருவடிகளாகவே நினைத்துக்கொண்டு அந்தத் தொண்டினை நிறைவேற்றினார். இதில், முக்கிய நோக்கம், 'கட்டளை செவ்வனே நிறைவேறி, ஸ்ரீமந் நாதமுனிகளின் திருவுள்ளம் உகக்கவேண்டும்,' என்பதே.




கேள்வி # 2:

அர்ச்சை அவதாரத்தில் எம்பெருமான் விக்கிரக வடிவில் எழுந்தருளி உள்ளான் என்றாலும் என்னைப் போன்ற ஒரு சாமானிய மனிதனுக்கு அவனது அழகை அவனது திருவவதாரக் காலங்களில் வெளிப்படுத்தியபடியே காண வேண்டும் என்ற பேராவல் இருக்கிறது. திருப்பாணாழ்வாருக்கும் ஸ்ரீ ஆளவந்தருக்கும் திருவரங்கன் காட்டிய கண்ணழகின் சிறப்பு தான் என்ன? ஏதாவது குறிப்புகள் உள்ளனவா? மற்றவர்கள் காணாத ஒரு காட்சியை அவர்கள் கண்டது போலத் தெரிகிறது. அன்னை யசோதை பற்பல பிரம்மாண்டங்களைக் கண்ணனின் வாயில் கண்டது போல ஏதேனும் சிறப்பாகக் கண்டனரா?

விடை # 2:

அடியேன் உள்பட பற்பல அடியவர்களை வாட்டி எடுக்கும் ஒரு அருமையான கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். :-)

மிக உயர்ந்த ஆசாரியரான மணக்கால் நம்பிகளின் பரிந்துரையால் எம்பெருமான் தனது தனிச்சிறப்பு வாய்ந்த திருக்கண்களை ஆளவந்தாருக்குக் காட்டியருளினான். அதைக் கண்ட மாத்திரத்தில் அரசாண்டு கொண்டிருந்த ஆளவந்தார் துறவறமே மேற்கொண்டார் என்றால் உண்மையிலேயே அந்தத் திருக்கண்களைப் பற்றி முழுவதும் வருணித்து முடிப்பது என்பது நடவாத ஒன்று என்றே தோன்றுகிறது.

திருப்பாணாழ்வாருக்கு எம்பெருமான் மயர்வு [மயக்கம்] அற மதிநலம் அருளினான். அவர் லோகசாரங்க முனி என்ற ஒரு அடியவரால் முதலில் காயப்படுத்தப்பட்டார். இதனால், திருவுள்ளம் வருந்திய திருவரங்கன், லோகசாரங்க முனியிடம், "திருப்பாணாழ்வாரை உங்கள் தோள்களில் சுமந்து வாருங்கள்," என்று கட்டளை இட்டான். லோகசாரங்கர் திருத்தோள்களில் ஏறிக்கொள்ள முதலில் இசையாத திருப்பாணாழ்வார், "ஐயனே! இது திருவரங்கனின் ஆணை!" என்று லோகசாரங்க முனி அறிவித்தவுடன், அவரது திருத்தோள்களில் ஏறிக்கொண்டார். இருப்பினும், தம்மை ஒரு அடியவருக்கு எம்பெருமான் ஆட்படுத்தியதாகவே திருப்பாணாழ்வார் மனமாரக் கருதினார். இதனாலேயே, அவரது முதல் பாசுரமே "அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்!" என்றே தொடங்குகின்றது.

எம்பெருமானது திருக்கண்களைக் கண்ட திருப்பாணாழ்வாருடைய பாசுரம் இதோ:

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்து
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே

இதற்கு ஆசாரியர்கள் அருளிய உரை சற்று ஆழ்ந்து அனுபவிக்கவேண்டியது. வேறு ஒரு சமயம் பதிவு செய்கிறேன்.




கேள்வி # 3:

இந்த அரையர் சுவாமி ஸ்ரீ ஆளவந்தாரிடம் இருமுறை அபிநயம் பிடித்ததால் ஸ்ரீ ஆளவந்தார் அவ்வளவு நெடுந்தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது! ஸ்ரீ தெய்வவாரியாண்டானின் திருமேனிக்கும் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்படிச் செய்துவிட்டாரே! எவருடைய முகத்தைக் கண்டும் பாசுரங்களை அபிநயிக்கக் கூடாது என்று அரையர்களுக்கு உத்தரவு போட்டால் நன்றாக இருக்கும். இல்லையேல் அறையர் சுவாமி நம் அருகில் வந்தால், நமது கண்களை மூடிக்கொண்டு அவர் பாடுவதை மட்டும் கேட்டால் சரியாக இருக்கும்.

விடை # 3:

உண்மையில், அரையர் சுவாமியை ஆளவந்தாரை நோக்கி அவ்வாறு அபிநயம் பிடிக்கச் செய்தது அரையர் சுவாமியின் அந்தர்யாமியான திருவரங்கனே. நீங்கள் திருவரங்கனை நேரில் சேவித்து [குறைந்த பட்சம்] நான்கு கேள்விகளையாவது நறுக்கென்று கேளுங்கள். :-)

Jokes apart, இராமானுசர் தரிசனத்து ஆசாரியர்கள் அரையர் சுவாமிகளை மிகவும் போற்றி வணங்கி வந்தனர். ஏனெனில், ஆழ்வார்களின் பாசுரங்களை நாதமுனிகள் அருளிய திருக்கட்டளையின் வண்ணம் பண்ணுடனும் [இராகத்துடனும்] அபிநயத்துடனும் எம்பெருமானுக்கும், அவனது அடியார்களுக்கும் இன்பம் ஏற்படும்படி அவர்கள் விண்ணப்பித்தனர். இதனால், அரையர் சுவாமிகளை ஆழ்வார்களின் பிரதிநிதியாகவே ஆசாரியர்கள் கொண்டனர். இதே காரணங்களால், அரையர் சுவாமி நமது அருகே வந்து அபிநயம் படித்தால் நாம் கண்களை நன்கு அகல விரித்துக் கொண்டு அவர்களைச் சேவிக்கவேண்டும்! :-) அதுவே நமது கண்களைப் பெற்ற பயன் அன்றோ?

அந்த அரையர் சுவாமி ஆளவந்தார் முன்னிலையில் அவ்வாறு அபிநயம் பிடித்தபோது, ஆளவந்தார் அருளிய திருவாக்கு: "நம்மாழ்வார் தம்முடைய அடியார்களை, 'திருவனந்தபுரம் நோக்கி நடமின்!' என்று திருக்கட்டளையிட்டுள்ளார். அடியேன் நம்மாழ்வாரின் அடியார்க்கு அடியவன். எனவே, அடியேன் நிச்சயமாக இதைச் சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டும்," என்று அருளிவிட்டே திருவனந்தபுரம் நோக்கி நடக்கலானார். ஆகையால், இது ஆழ்வாரின் திருவாக்கிற்குப் பெருமதிப்பளித்து ஆளவந்தார் செய்த தொண்டே ஆகும். 'ஆளவந்தார் அவ்வளவு தூரம் நடந்து அருளினாரே!' என்று நீங்கள் வருந்துவது மிகவும் பாராட்டத்தக்கதே. இருப்பினும், இது ஆளவந்தார் மனம் உவந்து ஆழ்வாருக்காகச் செய்த தொண்டேயாம்.




கேள்வி # 4.1:

ஸ்ரீ தெய்வவாரியாண்டான் தமது குருவான ஸ்ரீ ஆளவந்தாரைப் பிரிந்து வாடிய விதம் மிகவும் அரிதான ஒரு ஆசாரிய பக்தியாகும். அவரது பிரிவால் ஸ்ரீ தெய்வவாரியாண்டான் வாடி விடுவார் என்று ஸ்ரீ ஆளவந்தார் அறிந்திருக்கவில்லையோ? திருவரங்கநாதன் திருக்கோயிலை நிர்வகிக்க ஒரு குழுவை நிறுவி இருக்கலாமே!

விடை # 4.1:

நியாயமான கேள்வி. இதற்குப் பெரியோர்கள் என்ன விடை அருள்வார்கள் என்று அடியேனுக்குத் தெரியவில்லை. அடியேனது புரிதலை மட்டும் விடையாக அளிக்கின்றேன்:

ஆசாரியர்கள் தங்களது சீடர்களின் மனோபாவங்களை, அவர்களது ஆத்ம குணங்களில் உள்ள நிறைகளை மற்றும் குறைகளை நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். சில சமயங்களில் அவர்களுக்கு ஆன்மீகக் கல்விகளைப் போதிக்க அவர்கள் சில முடிவுகளை எடுத்தார்கள். தமது பிரிவால் தெய்வவாரியாண்டான் நிச்சயம் வாடி வதங்கி விடுவார் என்று ஆளவந்தார் அறிந்திருந்தார் என்றே அடியேன் எண்ணுகின்றேன். 'அப்படி இருந்தும் இதைச் செய்ததன் காரணம் என்ன?' என்றால் இங்கு தான் நாம் ஆசாரிய பக்தியில் இரண்டு மனோநிலைகளைப் புரிந்துகொள்ளவேண்டும்:

1. நம் விருப்பப்படி ஆசாரியருக்கு உளமார மனம் உவந்து செய்வது - இதற்கு சேஷத்வம் என்று பெயர்.
2. நமது சொந்த விருப்பு வெறுப்புகளைப் புறந்தள்ளிவிட்டு ஆசாரியன் விருப்பப்படி அவருக்குத் தொண்டு செய்வது - இதற்கு பாரதந்தர்யம் என்று பெயர் - தொண்டைப் பெறுபவரின் மகிழ்ச்சியை மட்டுமே கருத்தில் கொள்வதால், இது சேஷத்வத்தை விடச் சிறந்தது!

ஸ்ரீ இராமாயணத்தில் இளையபெருமாள் என்று போற்றப்படும் இலக்குவன், இராமபிரான் அவரைத் திருவயோத்தியிலேயே இருக்கச் சொன்ன போதும், "அண்ணலே! உம்மைப் பிரிந்தால், தண்ணீரை விட்டுப் பிரிந்த மீனைப் போலத் துடிதுடித்து சில நொடிகளிலேயே உயிர் விடுவேன்! உமக்குத் தொண்டு செய்வதே அடியேனுக்கு வாழ்வு!" என்று கூறி இராமபிரானைப் பின்தொடர்ந்தார். இது மிகப் பெரிய தொண்டு என்றாலும், உண்மையில் இராமபிரானுக்குத் தொண்டு செய்யாமல் பரதாழ்வானாலும் இருக்க இயலாது. இராமபிரான் திருவயோத்தியை ஆளவேண்டும் என்பதில் பரதாழ்வான் மிகவும் குறியாக இருந்தார். இருப்பினும், "பரதா! தந்தையின் வாக்கை நிறைவேற்றுவதே எனது விருப்பம். நீ திருவயோத்தியிலேயே இருக்க வேண்டும். நானே ஆரண்யத்தில் இருப்பேன்!" என்று இராமபிரான் அருளினார். "அண்ணல் இராமனின் விருப்பமே அடியேன் விருப்பத்தை விட மேலானது!" என்று இராமபிரான் சொன்ன வண்ணம் செய்த அடியாராக பரதாழ்வான் திகழ்ந்தார். இந்த ஒரு கல்வியைப் போதிக்கவே ஆளவந்தார் தெய்வவாரியாண்டனைத் தேர்ந்தெடுத்தார் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆளவந்தார் தெய்வவாரியாண்டானைக் கடிந்துகொண்டபோதும் பரதாழ்வான் நிலையை மேற்கோள் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அல்லது தெய்வவாரியாண்டான் பெருமையை வெளியிட எம்பெருமான் செய்த ஒரு லீலை என்றும் கொள்ளலாம்.




கேள்வி # 4.2:

திருவரங்கனின் திருக்கண்களைச் சிறப்பான முறையில் நேரில் கண்டு உணர்ந்த ஸ்ரீ ஆளவந்தார், ஒரு அரையர் சுவாமியின் திருவாக்கைக் கருத்தில் கொண்டு அந்தத் திருக்கண்களைத் துறந்து திருவனந்தபுரம் சென்றார் என்றால் அரையர் சுவாமியின் திருவாக்கு எம்பெருமானின் திருக்கண்களைக் காட்டிலும் உயர்ந்ததோ?

விடை # 4.2:

தாங்கள் கூறியது முற்றிலும் சரியே. அரையர் சுவாமி அபிநயம் செய்து பாடியது நம்மாழ்வாரின் திருவாக்கு! நம்மாழ்வாரின் திருவாக்கே எம்பெருமானின் திருக்கண்ணழகைக் காட்டிலும் உயர்ந்தது. இதுவே, ஸ்ரீவைணவ ஆசாரியர்களின் துணிபு. அடியார்களின் திருவாக்கு எம்பெருமானை விட, எம்பெருமானின் திருமேனி எழிலை விட, எம்பெருமானின் திருவாக்கை விட உயர்ந்தது என்பதற்கான சான்றுகள் நமது இதிகாசங்களிலேயே உள்ளன!

"காட்டில் நடந்து செல்லும் இராமனைப் பின்தொடரும் நீ, கவனக்குறைவால் இராமனைக் காக்கத் தவறிவிடாதே," [ஸ்ரீ இராமாயணம் அயோத்தியா காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 5] என்று அன்னை சுமித்திரை இலக்குவனுக்கு அறிவுரை கூறுகிறார். இதற்கு ஸ்ரீவைணவ ஆசாரியர்கள், "எம்பெருமானின் நடையழகைக் கண்டு, அதில் மனதைப் பறிகொடுத்து, கவனம் சிதறி, அவரைக் காக்கவேண்டிய தொண்டினில் குற்றம் புரிந்துவிடாதே!" என்றே பொருள் கொண்டுள்ளனர்! இதிலிருந்து எம்பெருமானின் திருமேனி எழிலை மட்டுமே நாம் கண்டு கொண்டிருந்தால், அவருக்குச் செய்யும் தொண்டில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. எம்பெருமானுக்கும் அவனது அடியவர்களுக்கும் தொண்டு செய்து கிடப்பதே ஜீவாத்மாவின் இலக்கணம் என்பது ஸ்ரீ இராமானுச சித்தாந்தம்.

இது மட்டும் இன்றி, இராமபிரானின் தம்பிகளுள் கடைக்குட்டி சத்ருக்னனுக்கு அந்தப் பெயர் இட்டதன் காரணம் பின்வருமாறு: சத்ருக்னன் என்றால் 'எதிரிகளை வென்றவன்' என்று பொருள். 'இராமனும், பரதனும், இலக்குவனும் வெல்லாத எதிரியை இவர் என்ன வென்றுவிட்டார்?' என்றால் இராமனின் பேரழில் என்ற எதிரியை வென்று, அவரது மொத்த கவனத்தையும் பரதாழ்வானுக்குத் தொண்டு செய்வதில் அவர் செலுத்தினார் என்பதே அவர் கண்ட வெற்றியாம்! எம்பெருமானின் பேரெழிலில் நாம் ஈடுபட்டுவிட்டால், அவனது அடியார்களுக்குச் செய்யும் தொண்டுகளில் நாம் கோட்டை விட வாய்ப்புள்ளது. ஆகையால், ஸ்ரீவைணவப் பெரியோர்கள் அதைத் தவிர்த்து வந்துள்ளனர்.

கண்ணன் எம்பெருமான், "மகாபாரதப் போரில் நான் ஆயுதம் எடுக்க மாட்டேன்," என்ற சபதம் செய்த பின், "நான் கண்ணனை ஆயுதம் எடுக்க வைப்பேன்!" என்று பீஷ்மாசாரியார் சபதம் செய்தார். அடியார்களின் திருவாக்கே தனது திருவாக்கை விட உயர்ந்தது என்பதை மெய்ப்பிக்க, மாயவனும் பீஷ்மாசாரியாரை நோக்கிச் சக்ராயுதத்தை ஏந்திக் கொண்டு ஓடி வந்தான். பீஷ்மாசாரியர் சபதத்தில் வென்றுவிட்டார்! இதிலிருந்து, எம்பெருமானே தன் திருவாக்கை விட அடியார்கள் திருவாக்கு உயர்ந்தது என்று அருளியுள்ளான் என்பதும் விளங்குகிறது. ஸ்ரீநரசிம்ம அவதாரமும் பிரகலாதாழ்வானின் திருவாக்கை மெய்ப்பிக்கவே எடுக்கப்பட்டது அன்றோ?

இதனாலேயே, ஸ்ரீ ஆளவந்தாரும் திருவரங்கனின் கண்ணழகைக் காட்டிலும், அந்தத் திருவரங்கனுக்கே ஆட்பட்டிருந்த நம்மாழ்வாரின் திருவாக்கே உயர்ந்தது என்பதை உணர்ந்து, அதனைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றினார்!




கேள்வி # 5:

ஸ்ரீ தெய்வவாரியாண்டனைத் தூக்கிச் சென்றவர்களுக்கு உண்மையிலேயே மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும்! இந்தக் காலத்திலேயே அவ்வளவு தூரத்தைக் [380 km] கடக்க 3-4 நாட்கள் இடைவிடாமல் நடந்தால் ஒழிய முடியாது என்பதை Google Search தெரிவிக்கிறது. உண்பதற்கு உணவு ஆகியவற்றை எப்படித் தூக்கிச் சென்றனர்? தங்களையும் பேணிக்கொண்டு, ஸ்ரீ தெய்வவாரியாண்டனையும் பேணிக்கொண்டு எப்படி இதைச் செய்தனர்? ஸ்ரீ ஆளவந்தார் அவர்களையும் பாராட்டி, அருட்பார்வை புரிந்தார் என்று நம்புகிறேன்.

விடை # 5:

அந்தப் பலவான்களும் அடியார்களே. அப்படியே அவர்கள் சாமானியர்களாக இருந்தாலும், அவர்களை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்! இது போன்ற சில தகவல்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாது. எனினும், தெய்வவாரியாண்டான் போன்ற ஒரு உத்தம அடியாரின் உயிரைக் காக்க அவர்கள் செய்த தொண்டிற்கு ஆளவந்தார் மற்றும் எம்பெருமானின் அருள் ஐயமேதுமின்றி பூரணமாகக் கிட்டியிருக்கும்.

தெய்வவாரியாண்டான் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், அவர்கள் உணவு உண்ணக்கூட எங்கும் நிற்கவில்லை என்பதே அடியேனின் புரிதல். அந்தக் காலத்தில், பல நாள்கள் உணவு உண்ணாமல் இருக்கத் தேவையான மனோதிடம் இருந்தது [குறிப்பாக இது போன்ற அடியார்களுக்கு மிக அதிகமாக இருந்தது]. விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் செய்து உணவிடுவது என்பதும் மிகச் சிறந்த தர்மமாக போற்றிப் பாதுகாக்கப்பட்டது. ஆகையால், உணவை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை.




கேள்வி # 6.1:

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ தெய்வவாரியாண்டானைக் கோபித்துக் கொண்டிருக்கவேண்டாம். ஸ்ரீ தெய்வவாரியாண்டானின் மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும்! அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்களுக்கும் எவ்வளவு குற்ற உணர்ச்சியாக இருந்திருக்கும்! ஆனால், ஸ்ரீ ஆளவந்தார் அவ்வளவு கோபித்துக் கொண்ட போதும், ஸ்ரீ தெய்வவாரியாண்டான் பணிவாகவே இருந்திருக்கிறார்!

விடை # 6.1:

ஒரு சீடனின் ஆன்ம முன்னேற்றத்தை எப்போதும் கருத்தில் கொண்டு அதைச் சீர்திருத்துவதே ஒரு ஆசாரியனின் முக்கியக் கடமையாகும். முன்னமே, சேஷத்வம் பாரதந்தர்யம் ஆகிய பக்தி நிலைகளைப் பற்றிக் கண்டோம். சேஷத்வத்தைக் காட்டிலும் பாரதந்தர்யம் சிறந்தது என்பதால் அந்நிலையைத் தெய்வவாரியாண்டவனுக்குப் புகட்ட ஆளவந்தார் பொய்க்கோபம் கொண்டார். முதலில், ஒரு தந்தையைப் போல் கண்டிப்புடன் தெய்வவாரியாண்டவனுக்கு [தற்காலிகமான "கசப்பை" ஏற்படுத்தினாலும் இறுதியில் நன்மையே செய்யும்] இதத்தை உபதேசித்தார். அதன் பின், ஒரு தாயைப்போல பரிவுடன் தெய்வவாரியாண்டனை அரவணைத்தார். மற்றவர்களும் ஆளவந்தாரிடம் உரிமையுடன் தங்கள் எண்ணங்களை விண்ணப்பம் செய்துள்ளனர். அதை ஆளவந்தார் கருணையுடன் கேட்டு அருளினார் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். "எம்பெருமானைக் காட்டிலும் ஆசாரியன் சிறந்த தெய்வம்," என்று அறுதியிட்டு, தெய்வவாரியாண்டான் திருவனந்தபுரத்து எம்பெருமான் குறித்த ஆளவந்தார் கட்டளையை மீறியபோது, அது சாத்திரத்தின் வழியில் சரி என்பதால் ஆளவந்தார் அதைக் கண்டிக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.




கேள்வி # 6.2:

திருவனந்தபுரம் வரை சென்ற தெய்வவாரியாண்டான், திருவனந்தபத்மநாபரை ஏறெடுத்தும் பாராமல் திரும்பியது சற்று அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது.

விடை # 6.2:

"ஆசாரியன் என்பவர் எம்பெருமானுடைய ஒரு சிறப்பான திருவவதாரம்," என்று சாத்திரங்களில் ஓதியதை மனமார உணர்ந்ததால் தெய்வவாரியாண்டானுக்கு அது சாத்தியமானது. அந்த நிலையை எட்டிப்பிடிக்கக் காலம் பிடிக்கும். அந்த நல்ல காலம் வரும் வரை, நம் போன்றோருக்கு இது சற்று புரியாத புதிராகவே இருக்கும். ஸ்ரீவைணவம் அல்லாது மற்ற சம்பிரதாயங்களிலும் 'குருவே தெய்வம்' என்று இருந்துள்ளனர்.




கேள்விகளுக்கு ஒரு சிறு முடிவுரை

முடிவாக, இந்தக் குருமார்களும் சீடர்களும் மொழியைக் கடக்கும் புகழாளர்களாக இருக்கிறார்கள். எம்பெருமானே தங்களுக்கு எல்லாமாகக் கொண்டவர்கள். இந்தக் காலத்தின் கொடுமைகளைக் காணாத பாக்கியசாலிகள். வைகுந்தத்தில் வாழும் அவர்களுடன் தொடர்பு கொள்ள ஒரு வழியும் இல்லாமல் போனதே!




Saturday, July 20, 2024

குருவருளால் தழைக்கும் கற்பகத் தருக்கள்!

Image Source: https://pbase.com/svami/image/126678232




அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடை காட்டி - உம்பர்
திவம் என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும்
அவன் அன்றோ ஆசாரியன்

விளக்கம்: திருவரங்கன் யார்? நாம் யார்? திருவரங்கனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? திருவரங்கனின் திருவடிகளை அடைந்து வைகுந்தம் செல்ல வழி எது? நாம் வைகுந்தம் செல்லத் தடையாக இருப்பது எது? ஆகியவற்றை நமக்கு அறிவிப்பவன் அன்றோ ஆசாரியன்?



முன்னுரை

இன்று நமக்குப் பற்பல சாத்திரங்களை அருளிய வேதவியாச பகவானின் திருவவதார நன்னாளை 'குரு பூர்ணிமை' என்று பலரும் கொண்டாடுகிறார்கள். குருமார்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றார்கள்.

'எம்பெருமானார் தரிசனம்' என்று போற்றப்படும் ஸ்ரீ ராமானுஜ சித்தாந்த்தத்தின் முக்கிய ஏற்றம் அதன் குரு பரம்பரையே ஆகும். அந்தப் பரம்பரையில் ஒவ்வொரு ஆசாரியரின் தெய்வீக வாழ்க்கைச் சரித்திரம் என்கிற ஆராவமுதக்கடலில் மூழ்கித் திளைப்பவர்களுக்குக் கிடைக்கும் இரத்தினக் குவியல்கள் ஏராளம் ஏராளம். இன்று ஆடி உத்திராடத்தில் திருநட்சத்திரம் கண்டருளும் ஆளவந்தார் என்ற ஆசிரியரின் தெய்வீக வாழ்க்கைச் சரித்திரத்தில் ஒரு சில இரத்தினங்களை உங்களுடன் பகிர்ந்து மகிழவே இச்சிறு கட்டுரை.

இந்த அற்புதமான நிகழ்ச்சிகள் முக்கியமாக ஒரு ஆசாரியர் என்பவர் நமது ஆன்மா தழைத்து ஓங்க எப்படியெல்லாம் முயல்கிறார் என்பதையும், அப்படிப்பட்ட ஆசாரியர் பரம்பொருளின் மறு வடிவமே அன்றி வேறல்ல என்பதையும், அவரே நமது ஆன்மாவின் உயிர்நாடி என்பதையும் விளக்கும் நிகழ்ச்சிகள்.

ஆசாரியர் ஆளவந்தார் - ஒரு சிறு அறிமுகம்

இராமானுசருக்கு ஆசாரியராகத் திகழ்ந்தவர் பெரிய நம்பிகள் என்னும் மகான். அந்தப் பெரிய நம்பிகளின் குருவாக எழுந்தருளியிருந்தவர் யமுனைத்துறைவர் என்கிற ஆளவந்தார். தமது பரமாசாரியரான [குருவின் குருவான] ஆளவந்தாரின் திருவடிகளின் மீது இராமானுசர் மிக்க பக்தி பூண்டிருந்தார்.

ஒரு வாதத்தில் வென்றதால் தமக்குக் கிடைத்த ஒரு நிலப்பகுதியை ஆளவந்தார் ஆண்டு வந்தார். அந்தக் காலத்தில் அவருக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு பெரிதும் இல்லாமல் இருந்தது. "வருங்காலத்தில் பிறக்கப்போகும் எமது பேரனுக்கு ஆன்மீக இரகசிய ஆழ்பொருள்களைக் கற்பிக்க வேண்டும்," என்று ஆளவந்தாரின் திருப்பாட்டனாரான நாதமுனிகள் என்னும் ஆசாரியர், தமது முக்கியச் சீடரான உய்யக்கொண்டாருக்குக் கட்டளையிட்டிருந்தார். ஆனால், ஆளவந்தார் தோன்றும் முன்னரே ஆசாரியர் உய்யக்கொண்டார் வைகுந்தம் புகுந்துவிட்டார். ஆதலால், நாதமுனிகளின் கட்டளையை உய்யக்கொண்டாரின் முக்கியச் சீடரான மணக்கால் நம்பிகள் சிரமேற்கொண்டார்.

ஆளவந்தாரையும் ஆள வந்த ஆசாரியர்

ஆளவந்தாரைக் கண்டு ஆன்மீக இரகசிய ஆழபொருள்களை அறிவிக்க, துறவியான மணக்கால் நம்பிகள் ஆளவந்தாரின் அரண்மனைக்குச் சென்றார். ஆனால், அவரது எளிமையான துறவிக்கோலத்தைக் கண்ட காவலாளிகள் மணக்கால் நம்பிகளை உள்ளே விடவில்லை. சற்றும் தளராத மணக்கால் நம்பிகள், அரண்மனைச் சமையல்காரரைக் கண்டு, "உங்கள் அரசர் ஆளவந்தருக்கு விருப்பமான உணவு எது?" என்று வினவினார். "தூதுவளைக் கீரையை மிகவும் விரும்பி உண்பார்," என்று சமையல்காரரும் விடையளிக்க, ஒவ்வொரு நாளும் மணக்கால் நம்பிகள் தூதுவளைக் கீரையை அந்தச் சமையல்காரரிடம் கொடுத்து வந்தார்! ஆளவந்தாரும் தினமும் மகிழ்ச்சியுடன் சமைத்த கீரையை உண்டு வந்தார்.

சில நாள்கள் சென்ற பின், திடீரென மணக்கால் நம்பிகள் நான்கு நாள்கள் எதையும் கொண்டு வந்து கொடுக்கவில்லை. "ஏன் நீங்கள் தூதுவளைக் கீரையை இப்போதெல்லாம் சமைப்பதில்லை?" என்று ஆளவந்தார் சமையல்காரரிடம் வினவ, சமையல்காரர் நடந்ததைத் தெரிவித்தவுடன், புத்திக்கூர்மை மிக்கவரான ஆளவந்தார், "அந்தப் பெரியவர் மறுபடியும் வந்தால் என்னிடம் அழைத்து வாருங்கள்," என்று ஆணையிட்டார். சரியாக அடுத்த நாளே மணக்கால் நம்பிகள் தூதுவளைக் கீரையை கொண்டு வர, சமையல்காரரும் ஆளவந்தாரிடம் மணக்கால் நம்பிகளை அழைத்துச் சென்றார்.

"தங்களுக்கு என்ன வேண்டும்?" என்று ஆளவந்தார் மணக்கால் நம்பிகளைக் கேட்டார். மணக்கால் நம்பிகளும், "தங்களது திருப்பாட்டனார் ஒரு மாநிதியைத் தங்களிடம் சேர்ப்பிக்கவேண்டுமென்று கட்டளையிட்டுள்ளார். அதைத் தங்களிடம் முழுமையாகச் சேர்ப்பிக்கத் தங்களைத் தடையின்றி நாள்தோறும் சந்திக்கவேண்டும். அதற்கான தங்களது உத்தரவு வேண்டும்," என்று விடையளித்தார். வியப்படைந்த ஆளவந்தாலும் அவ்வாறே கட்டளை பிறப்பித்தார். அதன் பின், ஒவ்வொரு நாளும் மணக்கால் நம்பிகள் அரண்மனையில் ஆளவந்தாரைச் சந்தித்து, ஸ்ரீமத் பகவத் கீதையின் ஆழபொருள்களை ஆளவந்தாருக்குக் கற்பித்தார்!

குருவருளால் பெற்ற செல்வத் திருமாலின் திருவருள்

ஸ்ரீமத் பகவத் கீதையின் ஆழ்பொருள்களை முழுவதும் கேட்டு நெக்குருகிப் போன ஆளவந்தார், மணக்கால் நம்பிகளின் திருவடிகளைப் பிடித்துக்கொண்டார். தமது சிரத்தை அந்த மகானின் திருவடிகளில் வைத்து, "ஐயனே! இந்த உயர்ந்த சாத்திரத்தை அருளிய அந்தப் பரம்பொருளைக் காணமுடியுமா?" என்று கண்களில் நீர் மல்கக் கேட்டார். இந்த நொடிக்காகவே காத்திருந்த மணக்கால் நம்பிகள், ஆளவந்தாரின் கையைப் பிடித்துக்கொண்டு, "நம்முடன் வாரும்," என்று அருளி, ஆளவந்தாரைத் திருவரங்கம் அழைத்துச் சென்றார்.

திருவரங்கன் முன் ஆளவந்தாரை நிற்க வைத்து, "இவரே தங்கள் திருப்பாட்டனார் தங்களிடம் சேர்ப்பிக்கச் சொன்ன மாநிதி," என்று ஆளவந்தாரிடம் அருளி, திருவரங்கப் பெருமாளை நோக்கி, "திருவரங்கா! திருப்பாணாழ்வாருக்கு உனது திருக்கண்ணழகை எப்படிக் காட்டி அருளினாயோ, அதே போல ஆளவந்தாருக்கும் காட்டியருள வேண்டும்," என்று வேண்டினார். மெய்யடியார்கள் சொன்ன வண்ணம் செய்யும் பெருமாளான திருவரங்கனும் அவ்வாறே அருள, ஆசாரியனின் இன்னருளால் ஈடு இணையில்லாத அந்தத் திருக்கண்களைக் கண்ட ஆளவந்தார், "என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே!" என்று அறுதியிட்டு, அப்பொழுதே துறவறம் மேற்கொண்டார்!

பிற்காலத்தில், ஆளவந்தார் 'கீதார்த்த சங்கிரகம்' என்ற வடமொழி நூலில் ஸ்ரீமத் பகவத் கீதையின் சாரமான அர்த்தங்களை 32 சுலோகங்களில் இயற்றினார். இதுவே இராமானுசர் ஸ்ரீமத் பகவத் கீதைக்கு 'கீதா பாஷ்யம்' என்ற உரை அருள அடிக்கல்லாகத் திகழ்ந்தது.

"திருவனந்தபுரத்தானைக் காண நடமினோ!"

'அரையர் சேவை' என்பது ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்களை, ஆசாரியர் நாதமுனிகள் [ஆளவந்தாரின் திருப்பாட்டனார்] அமைத்த பண்ணிலும் [இராகத்திலும்] தாளத்திலும் இசைத்து, அப்பாசுரப் பொருள்களை வெளிக்கொண்டுவரும் வண்ணம் நாட்டியம் ஆடுதல். இதனைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை நோக்கிச் செய்வர். இப்படிச் செய்பவர்கள் 'அரையர்' என்று அழைக்கப்படுவர். திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாவரும் கண்டு களிப்பார்கள். ஆழ்வார்களின் அருளிச்செயல்களை எல்லோருக்கும் பரப்ப இந்த வழக்கத்தை ஏற்படுத்தியவர் ஆளவந்தாரின் திருப்பாட்டனார் ஆகிய நாதமுனிகளே ஆவார். இன்றும், நாதமுனிகள் திருக்குலத்தில் தோன்றியவர்கள், திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருநாராயணபுரம் ஆகிய திருத்தலங்களில் இந்தத் திருத்தொண்டைச் செய்து வருகின்றனர்.

ஒரு நாள், ஆளவந்தார் திருவரங்கத்தில் நடந்து கொண்டிருக்கும் அரையர் சேவையை, தம்முடைய சீடர்களுடன் அமர்ந்து, சுவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, நம்மாழ்வார் அருளிய ஒரு பாசுரத்திற்கு அரையர் அபிநயம் பிடித்து நாட்டியம் ஆடினார். அந்தப் பாசுரம்:

கடு வினை களையல் ஆகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம்
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாம் உமக்கு அறியச் சொன்னோம்

திடீரென அந்தப் பாசுர வரிகளை ஆளவந்தாரை நோக்கி அரையர் இரண்டு முறை அபிநயம் பிடித்தார்! பாசுர வரிகளில், "திருவனந்தபுரம் நோக்கி நடமினோ!" என்ற செய்தி பொதிந்திருந்ததால், ஆளவந்தார் இதைத் திருவரங்கனின் கட்டளையாகவே சிரமேற்கொண்டார். "அடியேன் இப்போதே திருவனந்தபுரம் செல்ல இருக்கின்றேன்," என்று அறிவித்த ஆளவந்தார், தமது சீடர்களுள் ஒருவரான தெய்வவாரியாண்டான் என்பவரிடம், "தெய்வவாரியாண்டானே! திருவரங்கத்திலேயே இருந்து, திருவரங்கத்துத் திருக்கோயிலில் நடக்கவேண்டிய தொண்டுகள் யாவும் சீராக நடைபெறும்படி நோக்கி இரு," என்று திருக்கட்டளை பிறப்பித்து, தாம் திருவனந்தபுரம் நோக்கிப் பயணித்தார்.

இரும்புக்கரத்தால் புரட்டியெடுத்த மனக்குமுறல்

ஆசாரியனின் திருக்கட்டளையைச் சிரமேற்கொண்ட தெய்வவாரியாண்டான், திருவரங்கத்துத் திருக்கோயில் திருத்தொண்டுகள் யாவும் செவ்வனே நடக்கும் வண்ணம் நன்கு கவனித்து வந்தார். எனினும், நாளுக்கு நாள் அவரது திருமேனியில் இனம் புரியாத ஒரு தளர்ச்சி ஏற்பட்டது. சில நாள்களில், அவரால் நடக்கவும் முடியாமல் போனது. பின்னர், மிக விரைவில் நிற்கவும் முடியாமல் துடித்த அவர், இறுதியில் படுத்தப் படுக்கையாக ஆகிவிட்டார்! திருமேனி முழுவதும் பாலின் வெள்ளை நிறமாக மாறியிருந்தது. மிக மிகத் தளர்ந்து போயிருந்தார்.

"இவருக்கு என்ன நடந்தது என்று புரிந்துகொள்ளத் தொடங்குவதற்கு முன்னாலேயே, நல்ல உடல்நலத்துடன் வலம் வந்துகொண்டிருந்த இவரை அசுர வேகத்தில் வீழ்த்திய இந்த நோய் யாது?" என்று அனைவரும் திகைத்தனர். மருத்துவர்களை அழைத்து வந்தனர். மருத்துவர்களும் நாடி பிடித்துப் பார்த்து, "இவருக்கு உடலில் எந்த நோயும் இல்லை. தாங்கமுடியாத ஏதோ ஒரு துயரம் இவரை மிகக் கடுமையாக வாட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது. விரைவில் அத்துயரை நீக்கினால் மட்டுமே இவர் உயிர் பிழைத்து மீண்டு வருவார்," என்று கூறிச் சென்றுவிட்டனர்.

இதைக் கேட்டுத் திகைத்த யாவரும் தெய்வவாரியாண்டான் அருகில் சென்று, "தெய்வவாரியாண்டானே! உம்மை ஆட்டிப்படைக்கும் மனத்துயர் என்ன? எங்களிடம் அருள் கூர்ந்து பகிர்ந்துகொள்ளுங்கள்," என்று வேண்டினர். மூச்சு முட்ட, திக்கித் திணறி, மெல்லிய குரலில் தெய்வவாரியாண்டான் விடையளித்தார்: "ஆசாரியர்... திருவடிகள்... பிரிந்து... அடியேனால்... இயலவில்லை!" இதைக் கேட்ட எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களுக்குப் புரிந்தது: ஆளவந்தார் பிரிவைத் தாங்கமுடியாமல் நெருப்பில் பட்ட புழுவாகத் தவித்துள்ளார். இருந்தும், 'திருவரங்கத்திலேயே இரு!' என்று ஆளவந்தார் ஆணையிட்டிருந்ததால், அதை மீறக்கூடாது என்று அமைதி காத்து, அந்தப் பிரிவாற்றாமையில் துடித்துக்கொண்டு, மெளனமாக வாடி வதங்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட மாபெரும் மன அழுத்தத்தில் மொத்தமாகச் சரிந்து, இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்!!!

ஆளவந்தார் திருவடிகளை நாடிப் பறந்தனர்

திருவரங்கத்திலிருந்து ஆளவந்தாருக்குச் செய்தி சொல்லி அனுப்பி, அவர் மீண்டு வரும் வரை தெய்வவாரியாண்டான் உயிர் நிச்சயம் தாங்காது என்று உணர்த்த அவர்கள் ஒரு முடிவு செய்தனர். கருணை உள்ளம் கொண்ட நான்கு பலவான்கள் முன்வந்தனர். படுத்திருந்த நிலையில் இருந்த தெய்வவாரியாண்டானின் இரண்டு திருக்கைகளையும், இரண்டு திருவடிகளையும் ஆளுக்கு ஒன்றாகப் பிடித்துக் கொண்டனர். மேலும் சில அடியார்களும் சேர்ந்துகொண்டனர். திருவனந்தபுரம் நோக்கி இரவு பகல் பாராமல் விடுவிடுவென ஓட்டமும் நடையுமாகப் பறந்தனர்!

வழி நெடுக, அவர்கள் எந்த ஊரில் அடி எடுத்து வைத்துள்ளனர் என்பதையும் அவ்வப்போது தெய்வவாரியாண்டானுக்குத் தெரிவித்துக் கொண்டே ஆறுதல் கூறியபடிச் சென்றனர். திருவனந்தபுரம் நெருங்கிக்கொண்டிருந்த நிலையில் தெய்வவாரியாண்டான் திருமேனியில் செம்மையான நிறம் மீண்டும் மிளிர்ந்தது! சிறிது நேரம் சென்றவுடன், அவர் இறங்கி நடக்கும் அளவிற்குத் தேறிவிட்டார்! திருவனந்தபுரம் வாயிலை அடைந்தபோது, தெய்வவாரியாண்டான் தாமே விடுவிடுவென்று நடக்கத் தொடங்கினார்!! ஆளவந்தார் எழுந்தருளியிருக்கும் இடத்தை விசாரித்து அறிந்து, திருவுள்ளமெங்கும் பேருவகை பூத்துக் குலுங்க, தாய்ப்பசுவின் மடியை நோக்கி ஓடும் கன்றினைப் போலத் துள்ளிக் குதித்து, தெய்வவாரியாண்டான் அவ்விடம் சென்று சேர்ந்தார்.

ஆசாரியரின் [பொய்க்] கோபமும் பேரருளும்

திருவனந்தபுரம் திருக்கோயிலுக்கு அருகில் ஒரு இடத்தில் தங்கி, மணக்கால் நம்பிகளின் திருவடிகளையே தியானித்து வந்த ஆளவந்தார், ஒவ்வொரு நாளும் தவறாமல் திருவனந்தபத்மநாபப் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடிக் காப்பிட்டு வந்தார். எம்பெருமானுக்குத் தாம் செய்த தொண்டுகள் யாவற்றையும் மணக்கால் நம்பிகளின் திருவுள்ள உகப்புக்காகவே ஆளவந்தார் செய்து வந்தார்.

ஆளவந்தாரைக் கண்டதும் தெய்வவாரியாண்டான் அவரது திருவடிகளைத் தடி போல விழுந்து வணங்கினார். ஆளவந்தாரின் திருமுகமண்டலம் மலரவில்லை. "அப்பனே! நீ இங்கே என்ன செய்கின்றாய்? திருவரங்கம் திருக்கோயிலை நன்கு கவனித்துக் கொள்ளச் சொன்னோம் அல்லவா? இராமபிரான் பரதாழ்வானைத் திருவயோத்தியில் இருக்கப் பணித்தபோது, பரதாழ்வான் 'இராமபிரானின் திருவாக்கே கட்டளை,' என்று அதனை நிறைவேற்றினார். ஆனால், அடியேன் இராமபிரானைப் போல ஒரு சக்கரவர்த்தியின் திருமகனும் அல்ல மாவீரனும் அல்ல. அதனாலேயே தெய்வவாரியாண்டான் அடியேன் சொல்லைக் கேட்கவில்லை போலும்," என்றார்.

'அன்பு ஆசாரியரின் திருவள்ளத்தில் கோபம் ஏற்படும்படி நடந்து கொண்டோமே!' என்று வருந்திய தெய்வவாரியாண்டான் அச்சத்தில் அமைதியாக இருந்தார். அவரது அச்சத்தை உணர்ந்த ஆளவந்தார், "எழுந்திரு," என்று உரைத்தார். இருப்பினும், தெய்வவாரியாண்டான் எழுந்திருக்கவில்லை. "அது சரி, தெய்வவாரியாண்டனை 'எழுந்திரு!' என்று பணிக்க நாம் யார்? அவரது விருப்பப்படியே அவர் நடப்பார் அன்றோ?" என்று ஆளவந்தார் மறுபடியும் இடித்துரைத்தார். இதைக் கேட்டு மிகவும் வருந்திய தெய்வவாரியாண்டான் உடனே எழுந்து, "ஐயனே! இந்த மதிகேடனைத் தாங்களே பொறுத்தருள வேண்டும்!" என்று மன்றாடினார்.

சுற்றி இருந்தவர்கள் எல்லோருக்கும் மிகவும் வருத்தமாகிவிட்டது. ஆளவந்தாரை நோக்கி, "ஐயனே! தங்கள் மீதுள்ள எல்லையற்ற அன்பின் காரணமாகவும், தங்கள் கட்டளைக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்ற காரணத்தாலும் தெய்வவாரியாண்டான் உயிரையே இழக்க இருந்தார்! அருள் கூர்ந்து அவரைப் பொறுத்தருளுங்கள்!" என்று நடந்தவற்றையெல்லாம் விண்ணப்பம் செய்தார்கள். ஆளவந்தார் புன்முறுவல் செய்து, "தெய்வவாரியாண்டானின் குழந்தை உள்ளத்தையும், எம் மீது வைத்திருக்கும் தூய அன்பையும் நாம் அறிவோம்!" என்று அருளி, தெய்வவாரியாண்டானை ஒரு தந்தையைப் போல வாரி அணைத்துக்கொண்டார். "குழந்தாய்! இவ்வளவு தூரம் மெலிந்தாயே!" என்று தாயின் பரிவுடன் நலம் விசாரித்து, தமது அன்புச் சீடரின் சோர்வெல்லாம் பறந்து போகும் வண்ணம் தெய்வவாரியாண்டானைக் குளிர நோக்கி அருளினார்.

"அடியேனின் திருவனந்தபுரம் எதிரே உள்ளது!"

"தெய்வவாரியாண்டானே! சென்று திருவனந்தபுரத்து எம்பெருமானை வணங்கி வா! அதற்குப் பின் நாம் எல்லோரும் சேர்ந்து திருவரங்கம் செல்வோம்!" என்று ஆளவந்தார் அன்புடன் அருளினார். ஆனால், தெய்வவாரியாண்டான் சற்றும் தயங்காமல், "அடியேன் திருவனந்தபுரம் எதிரிலேயே இருக்கின்றது!" என்று கூறிவிட்டார். அதாவது, பரம்பொருளே ஆசாரியன் வடிவில் வந்துள்ளார் என்பதை உணர்த்தும் வண்ணம் அவ்வாறு தெய்வவாரியாண்டான் அருளினார். அது மட்டுமின்றி, திருமால் திருக்கோயில்களில் வாழ்வதை விட, ஆளவந்தார் போன்ற மகான்களின் மனத்தில் அன்றோ உகந்து உறைகின்றான்? ஆளவந்தார் போன்ற மகான்கள் நடமாடும் திவ்யதேசங்கள்! இதனாலேயே, தெய்வவாரியாண்டான் பூரண ஞானத் தெளிவுடன் அவ்வாறு விடையளித்தார்.

இதை கேட்டதும் ஆளவந்தார் புன்முறுவல் பூத்து, தெய்வவாரியாண்டனைப் பேரன்புடன் அணைத்துக்கொண்டார். சுற்றி இருந்தவர்கள் யாவரும் இந்த மிகவும் அழகான ஆசாரியர்-சீடர் உறவைக் கண்டு, மகிழ்ச்சி பொங்க ஆரவாரம் செய்தனர். பின்பு, அனைவரும் திருவரங்கம் நோக்கி மகிழ்ச்சியுடன் நடக்கத் தொடங்கினர். திருவனந்தபுரம் கருவறையில் கிடந்த திருவனந்தபத்மநாபப் பெருமான், அவனது திருவுள்ளத்தில் பொங்கிப் பெருகும் உவகை எல்லாம் அவனது திருமுகமண்டலத்தில் தோற்றும் வண்ணம், மிகவும் அழகாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.



ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன்
ஆன குருவை அடைந்தக்கால் - மாநிலத்தீர்!
தேனார் கமலத் திருமாமகள் கொழுனன்
தானே வைகுந்தம் தரும்

விளக்கம்: நல்ல ஞானமும் அதற்கு ஏற்ற நன்னடத்தையும் உடைய ஒரு குருவை நாம் அடைந்தால், நமக்கு வைகுந்தத்தைத் திருமால் தாமே முன் வந்து [நாம் கேட்கத் தேவையே இல்லாமல்] அருள்வார்.



Friday, June 28, 2024

நம்பிள்ளை

Image Source: https://www.koyil.org/




நம்பெருமாள் "நம்மாழ்வார்! நஞ்சீயர்! நம்பிள்ளை!"
என்பர் அவரவர் தம் ஏற்றதால் - "அன்புடையோர்
சாற்று திருநாமங்கள் தான்!" என்று நன்னெஞ்சே!
ஏற்று அதனைச் சொல்லி நீ இன்று



இராமானுசரும் திருவாய்மொழியும்

ஆழ்வார்கள் அருளிய பாசுரத் தொகுதிகளுக்கு 'திவ்ய பிரபந்தங்கள்' என்று திருநாமம் [பெயர்] என்பதை நம்மில் பலர் அறிந்திருக்கக் கூடும். இவற்றிற்குப் பைந்தமிழில் 'அருளிச்செயல்கள்' என்று திருநாமம். நம்மாழ்வார் என்ற ஆழ்வார் அனைத்து ஆழ்வார்களுக்கும் தலைவர் ஆவார். அவர் 4 வேதங்களின் சாரமாக 4 அருளிச்செயல்களை அருளினார். அவற்றுள் மிகவும் முக்கியமானதும், உயர்ந்ததுமானது 1102 பாசுரங்கள் கொண்ட 'திருவாய்மொழி' என்ற அருளிச்செயல். இதுவே சாம வேதத்தின் சாரம் என்று போற்றப்படுகிறது.

இராமானுசர் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார். குறிப்பாக, நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் மீது இராமானுசர் பெருங்காதல் கொண்டிருந்தார். திருவாய்மொழியின் அருஞ்சொற்பொருள்களைக் கொண்டே வடமொழி வேதாந்தங்களின் உரை நூல்களை இராமானுசர் இயற்றினார்! திருவாய்மொழியின் ஆழ்பொருள்களை, அவற்றைக் கற்று, அவற்றின் படி வாழ்ந்து, முக்தி பெற வேண்டும் என்ற ஆசை உடையோருக்கெல்லாம், இராமானுசர் அவற்றை அருளினார். திருவாய்மொழியின் ஆழ்பொருள்களைத் தகுதி வாய்ந்த சீடர்களைக் கொண்டு ஓலைச்சுவடிகளில் ஏடுபடுத்தும் வழக்கத்தையும் தொடங்கிவைத்தார்.

ஆசாரியர் நஞ்சீயர் - ஒரு சிறு அறிமுகம்

இராமானுசர் வைகுந்தம் திரும்பவிருக்கும் நேரம். அப்போது, தமது மிக அணுக்கத் தொண்டரான கூரத்தாழ்வான் என்ற மகானின் திருமகனார் ஆகிய பராசர பட்டர் என்பவரை அடுத்த முக்கிய ஆசாரியராக இராமானுசர் நியமித்தார். அதன் பின், பராசர பட்டரிடம், "திருநாராயணபுரம் மேலக்கோட்டையில் வேதாந்தி மாதவன் என்று ஒருவர் உள்ளார். அவருக்கு நமது சித்தாந்தத்தை நீ எடுத்துரைக்க வேண்டும்," என்று திருக்கட்டளைப் பிறப்பித்து, இராமானுசர் வைகுந்தம் எழுந்தருளினார். பராசர பட்டர் இராமானுசரின் திருக்கட்டளையைச் செவ்வனே நிறைவேற்ற, வேதாந்தி மாதவனும் பராசர பட்டரின் திருவடிகளிலே தஞ்சம் புகுந்து, பின்னர் துறவறமும் மேற்கொண்டார். பராசர பட்டரும் "நம் சீயர்!" என்று வேதாந்தி மாதவரை அன்புடன் அழைத்ததால், அவருக்கு 'நஞ்சீயர்' என்ற திருநாமமே நிலைத்தது.

பராசர பட்டரின் திருக்கட்டளையைச் சிரமேற்கொண்டு, திருவாய்மொழிப் பாசுரங்களுக்கு '9000 படி' என்ற விளக்க உரையை நஞ்சீயர் இயற்றினார். [குறிப்பு: உரை நூல்கள் இயற்றும்போது, பிற்காலத்தில் அவற்றுள் இடைச்செருகல்கள் கலவாமல் தடுக்க, படி கணக்கில் அளந்து, அவற்றை இயற்றினார்கள். ஒரு 'படி' என்பது ஒற்றெழுத்துக்களை நீக்கி 32 எழுத்துக்கள் கொண்டது.]

பராசர பட்டர் வெகு காலம் இப்பூவுலகில் எழுந்தருளி இருக்கவில்லை. அவர் வைகுந்தம் செல்ல இருக்கும் நேரத்தில், "ஆசாரியரே! தாங்கள் வெகு காலம் இங்கு எழுந்தருளி இருந்து அடியேனுக்கு அருள் புரிவீர் என்று நினைத்தேன்," என்று நஞ்சீயர் பராசர பட்டரிடம் திருவுள்ளம் வெதும்பி வருந்தினார். அப்போது பராசர பட்டர், "நஞ்சீயரே! வருந்த வேண்டாம். உமது பிள்ளை போல் ஒருவன் வருவான்," என்று ஆசி கூறி, வைகுந்தம் புகுந்தார்.

திருக்கலிகன்றி தாசருக்கு நஞ்சீயர் இட்ட திருப்பணி

அதன் பிறகு, பராசர பட்டரின் திருக்கட்டளைப்படி, நஞ்சீயர் ஆசாரியராகப் பொறுப்பேற்று, இராமானுச சித்தாந்த மதத்தை வழி நடத்தி வந்தார். திருவாய்மொழிப் பாசுரங்களின் பொருள்களை ஆசை உடையோருக்கெல்லாம் கற்பித்தும் வந்தார். இப்படி இருக்க, ஒரு நாள், "இந்த 9000 படி உரை நூலைப் புதிய ஓலைச்சுவடிகளில் ஏடுபடுத்த வேண்டும். பிற்காலத்தில் எல்லோருக்கும் தெளிவாகப் புரியவேண்டும் ஆகையால், ஓலைச்சுவடியில் ஏடுபடுத்துபவரின் கையெழுத்து தெளிவாக, சீராக இருத்தல் வேண்டும். அப்படி எவரேனும் உங்களுள் உளரோ?" என்று தமது சீடர்களிடம் வினவினார். சீடர்களும், "ஐயனே! தங்களது திருவாய்மொழிப் பாசுர விளக்கங்களைக் கற்க, திருக்காவிரி ஆற்றின் அக்கரையிலிருந்து நம்பூர் வரதர் என்பவர் தினமும் வந்து செல்கின்றார். அவரது கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும்," என்றனர். "ஆகில், அவர் வந்த போது நம்மிடம் அழைத்து வாருங்கள்," என்று நஞ்சீயர் அருளினார். மறு நாள், சீடர்களும் நம்பூர் வரதரை நஞ்சீயரிடம் அழைத்துச் சென்றனர். நன்முத்துக்களை மாலைகளாகக் கோர்த்து வரிசையாக வைத்தது போலவிருந்த நம்பூர் வரதரின் கையெழுத்தைக் கண்டு புன்முறுவல் பூத்த நஞ்சீயர், சற்றே தயங்கினார்.

"ஆழ்வார்களின் பாசுரங்கள் சராசரித் தமிழ்ச் செய்யுள்கள் அல்ல. அவை தமிழ் மறைகள். எம்பெருமான் தானே உகந்து அருளிய ஞானமானது பக்தியாகக் கனிய அந்தத் தூய பக்தியில் நனைத்தெடுத்த ஈரச்சொற்கள். அவற்றையோ அவற்றின் பொருள்களையோ ஏடுபடுத்தவேண்டும் எனில், கையெழுத்து மட்டும் அழகாக இருந்தால் போதாது. இராமானுசரின் பூரண அருள் இருத்தல் வேண்டும். உமக்கு இராமானுசரின் திருவடிகளின் சம்பந்தம் இல்லையே!" என நம்பூர் வரதரை நோக்கி நஞ்சீயர் அருளினார். அடுத்த கணமே நம்பூர் வரதர் நஞ்சீயரின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டார். "அந்தக் கருணைக் கடலான இராமானுசரின் இன்னருளை அடியேனுக்குத் தாங்கள் பெற்றுக் கொடுத்தால் ஆகாதோ? தங்களது அடியவனை இராமானுசர் தமது அடியவனாக ஏற்று அருள்வார் அன்றோ?" என்று வேண்டினார்.

நம்பூர் வரதரது திருமுகத்திலும், குரலிலும், பேசும் தோரணையிலும், அவரது திருவுள்ளத்தில் இருந்த நேர்மையும் பக்தியும் நன்றாக விளங்கக் கண்ட நஞ்சீயர், மறுபடியும் புன்முறுவல் பூத்து, [பஞ்ச சம்ஸ்காரம் என்று அழைக்கப்படும்] ஸ்ரீவைணவ தீட்சையை நம்பூர் வரதருக்கு அருளி, நம்பூர் வரதரைத் தம்முடைய சீடராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு 'திருக்கலிகன்றி தாசர்' என்ற திருநாமத்தைச் சூட்டினார் [குறிப்பு: கலிகன்றி என்பது ஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கையாழ்வாரின் திருநாமம்].

அதன் பின்னர், 9000 படியின் ஓலைச்சுவடிகளைத் திருக்கலிகன்றி தாசரிடம் கொடுத்து, "இவை ஆழ்வார் அருளிய பாசுரங்களையும், அவற்றிற்குப் அறப்பெரியோர்களான நமது ஆசாரியர்கள் அருளிய பொருள்களையும் கொண்ட தெய்வீக ஓலைச்சுவடிகள். கண்ணும் கருத்துமாகக் கவனத்துடன் புதிய பிரதியில் ஏடுபடுத்தித் தாரும்," என்று அருளி, நஞ்சீயர் திருக்கலிகன்றி தாசருக்கு விடை கொடுத்தார்.

9000 படி விளக்கவுரை மறுபிறவி எடுத்தது!

திருக்கலிகன்றி தாசர் ஓலைச்சுவடிகளை மிகவும் கவனத்துடன் காப்பாற்றிக் கொண்டு திருக்காவிரி ஆற்றை நீந்திக் கடந்து கொண்டிருக்கையில், சற்றும் எதிர்பாராமல் வந்த மிகப்பெரிய ஆற்றின் அலை ஒன்று, ஒரே கணத்தில் ஓலைச்சுவடிகளை இருக்கும் இடம் தெரியாமல் அடித்துக்கொண்டு போயிற்று! நட்ட நடு ஆற்றில் திருக்கலிகன்றி தாசர் நிலை தடுமாறிப் போனார். சித்தம் கலங்கிய நிலையில், தமது இல்லத்திற்குச் சென்று, முறைப்படி இறைவனுக்குத் தூய அன்னத்தைப் படைத்தார்.

ஆனால், திருக்கலிகன்றி தாசர் ஒன்றுமே உண்ணவில்லை. "நஞ்சீயர் தமது திருக்கையால் எழுதிய 9000 படி விளக்க உரை! அந்த ஒரு பிரதி மட்டுமே இருந்தது. அது பழையதாகிவிடவே, புதிய பிரதியை எடுக்க உத்தரவிட்டார். இப்போது அது இருக்கும் இடம் தெரியாமல் போனது. என்ன செய்வேன்? ஆசாரியன் திருமுகத்தில் எப்படி விழிப்பேன்? என்ன விண்ணப்பம் செய்வேன்?" என்று மிகவும் மனம் நொந்து, நஞ்சீயரின் திருவடிகளையே தியானம் செய்து அமர்ந்திருந்தார். திருவுள்ளம் பேதலித்த அவரது நிலை கண்டு வருந்திய அவரது இல்லத்தரசியாரும் எதையுமே உண்ணவில்லை.

பல மணி நேரம் கழித்து, திருக்கலிகன்றி தாசர் தம்மை அறியாமல் உறக்கத்தில் ஆழ்ந்தார். அவருக்கு ஒரு கனவு: திருவரங்கத்துப் எம்பெருமான் தோன்றினான். "திருக்கலிகன்றி தாசரே! நீர் திருவாய்மொழி 1102 பாசுரங்களுக்கு நஞ்சீயர் அருளிய 9000 படி விளக்க உரைகளை நேரில் ஒரு முறை கேட்டிருக்கிறீர் அல்லவா? அதைக் கொண்டு எழுதும். நாம் முன்னே இருந்து உம்மை வழி நடத்துகிறோம்!" என்று அருளினான்! விழித்துக் கொண்ட திருக்கலிகன்றி தாசருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. "சரி, இது ஆசாரியன் நஞ்சீயர் இன்னருளால் திருவரங்கத்து எம்பெருமான் காட்டிய வழி," என்று முடிவு செய்து, நஞ்சீயரின் திருவடிகளைத் தமது திருவுள்ளத்தில் வைத்துப் பூசித்து, மூலப்பிரதி இல்லாமலேயே புதிய பிரதியைத் தமது நினைவாற்றலைக் கொண்டே எழுதி முடித்தார்!

"நம்பிள்ளையோ நீர்?"

எழுதி முடித்த பின், திருவரங்கத்திற்குச் சென்று, நஞ்சீயரின் திருவடிகளை வேரற்ற மரம் என விழுந்து வணங்கி, தாம் எழுதிக் கொண்டு வந்த பிரதியை அவரிடம் அர்ப்பணித்தார். திருவுள்ளம் உகந்த நஞ்சீயரும் புதிய பிரதியின் ஓலைச்சுவடிகளை வாசித்துப் பார்க்கத் தொடங்கினார். எல்லாம் மிகச் சரியாக இருந்தது. இருப்பினும், கூர்ந்து கவனித்த நஞ்சீயர், "சிற்சில இடங்களில் பொருள்கள் கூடுதலாகவும், வெகு அழகாகவும் இருக்கின்றனவே! இது எப்படி நிகழ்ந்தது?" என வினவினார். திருக்கலிகன்றி தாசருக்கு விடையளிக்கத் தயக்கமாகவும், அச்சமாகவும் இருந்தது. அவரது திருமுகபாவங்களை நோக்கிய நஞ்சீயர், "அஞ்சாமல் சொல்லும்!" என்று கனிவோடு அருளினார். நடந்தவற்றை ஒன்று விடாமல் திருக்கலிகன்றி தாசர் நஞ்சீயர் திருவடிகளில் விண்ணப்பித்தார். "அடியேனைப் பொறுத்தருள வேண்டும்," என்று தலை குனிந்து, வணங்கி, நடுநடுங்கி நின்றார். ஆனால், நஞ்சீயரின் திருமுகமண்டலமோ செந்தாமரையைப் போல மலர்ந்தது! தமது ஆசாரியர் பராசர பட்டர் அருளிய பிள்ளை போன்றவர் இவரே என்று ஐயமேதுமின்றி உணர்ந்த அவர், "நம் பிள்ளையோ நீர்?" என்று மகிழ்ச்சி பொங்க அருளினார். அன்றிலிருந்து, திருக்கலிகன்றி தாசருக்கு 'நம்பிள்ளை' என்ற சிறப்புத் திருநாமம் உண்டாயிற்று. அதுவே நிலைத்து நின்றது.

நம்பிள்ளையின் ஆசாரிய பக்தி

ஒரு முறை, நஞ்சீயரிடம் ஒருவர் வந்து, நஞ்சீயரை வணங்கி, "நஞ்சீயரே! நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் ஆழ்பொருளை அறிய ஆவலாக உள்ளது. அதற்குத் தாங்களே ஏற்பாடு செய்யவேண்டும். எனினும், கற்பிப்பவர் ஒரு மேடான இடத்தில் அமர்ந்துகொண்டு, நான் கீழே அமர்ந்துகொள்வது என்பதை நினைத்தால் எனக்குக் கூசுகிறது," என்று எவருமே சொல்லத் துணியாத ஒன்றைச் சொன்னார்! இதைக் கேட்டருளிய நஞ்சீயர் சிறிதும் கோபப்படவில்லை. மிகவும் அமைதியாக, தமது பேரன்புக்குரிய சீடரும், திருவாய்மொழி விற்பன்னரும் ஆகிய நம்பிள்ளையை அழைத்தார். நம்பிள்ளையும் நஞ்சீயரை வணங்கி நிற்க, "நம்பிள்ளையே! இவருக்குத் திருவாய்மொழியின் ஆழ்பொருள்களை அறிவிப்பீராக. பாடங்கள் நடக்கும்போது, நீர் கீழே அமர்ந்திருக்க வேண்டும். இவர் மேடான இடத்தில் அமர்ந்திருப்பார்," என்று அருளினார். நம்பிள்ளையின் திருவுள்ளத்திலோ திருமுகமண்டலத்திலோ ஒரு சிறு மாற்றமும் ஏற்படவில்லை. "அடியேன் திருக்கலிகன்றி தாசன்," என்று கூறி, நஞ்சீயரின் திருவடிகளை வணங்கினார்.

அடுத்த நாளிலிருந்து, எவருமே கேள்விப்படாத வகையில் திருவாய்மொழிப் பாடங்கள் தொடங்கின: நம்பிள்ளை கீழே அமர்ந்திருப்பார். கற்பவர் மேலே அமர்ந்திருப்பார். சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தால், நம்பிள்ளை மற்றவரிடம் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார் என்பது போலத் தோன்றும்! நாள்கள் செல்லச் செல்ல, கற்பவரின் மனம் மாறத் தொடங்கியது. திருவாய்மொழியில் உள்ள பாசுரங்களின் ஆழ்பொருள்கள் அவரது மனசாட்சியை உலுக்கின. "அந்தோ! திருமால் அடியார்களை எப்படி எல்லாம் பூசிக்க வேண்டும் என்று ஆழ்வார் அருளியுள்ளார்! நமக்கு இவ்வளவு உயர்ந்த ஆழ்பொருள்களை அறிவிக்கும் நம்பிள்ளையை அடியேன் பூசிக்க வேண்யிருக்க, நாம் அவருக்குப் பாடம் சொல்பவர் போல் செருக்குடன் அமர்ந்து உள்ளோமே!" என்று அவருக்குக் குற்ற உணர்ச்சி மேலிட்டது.

இதனால், அவர் நம்பிள்ளையிடம், "ஐயனே! இனிமேல் தாங்களே மேலே அமர்ந்து திருவாய்மொழியின் ஆழ்பொருள்களை அருளவேண்டும். அடியேன் கீழே அமர்ந்து கற்கிறேன்!" என்று பணிவுடன் வேண்டினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நம்பிள்ளை, "அப்படியென்றால் அடியேனால் தங்களுக்குப் பாடம் சொல்ல முடியாதே! தாங்கள் மேலே அமர்ந்திருக்க, அடியேன் கீழே அமரவேண்டும் என்பதே நஞ்சீயரின் திருக்கட்டளை. ஆசாரியரான நஞ்சீயரின் திருக்கட்டளையே வேதவாக்கை விட அடியேனுக்கு மேலானது. அதை மீற முடியாது," என்று பணிவுடனும் உறுதியுடனும் கூறிவிட்டார்!

இதைச் சற்றும் எதிர்பாராத அந்தச் சீடர் நஞ்சீயரிடம் விரைந்து சென்று, அவரது திருவடிகளை வணங்கி, "அடியேனுக்கு நரகத்தில் வாசம் ஏற்படாமல் தாங்களே காக்க வேண்டும்!" என்று கூறி, நடந்தவற்றையெல்லாம் விண்ணப்பித்தார். அனைத்தையும் கேட்டுப் புன்முறுவல் பூத்த நஞ்சீயர், நம்பிள்ளையை அழைத்து, "நம்பிள்ளையே! நாளை முதல் நீரே மேலே அமரவேண்டும்! இவர் கீழே அமர்ந்து திருவாய்மொழிப் பாடங்கள் கேட்பார்!" என்று அருளினார். அதற்குப் பின்னரே, நம்பிள்ளை மேலே அமர்ந்தபடி திருவாய்மொழிப் பாசுர ஆழ்பொருள்களை அறிவித்தார். என்னே நம்பிள்ளையின் வியப்பூட்டும் ஆசாரிய பக்தி! என்னே அவரது தன்னடக்கம்!

"நம்பெருமாள் கோட்டியோ? நம்பிள்ளை கோட்டியோ?"

நம்பிள்ளை தமிழிலும் வடமொழியிலும் அற்புதமான புலமை பெற்றுத் திகழ்ந்தார். இதனால், திருவாய்மொழியின் ஆழ்பொருள்களைக் கற்பிக்கும் போது, [திருக்குறள், கம்ப இராமாயணம் உள்பட] பற்பல தமிழ் நூல்கள், வடமொழி சாத்திரங்கள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டிப் பாசுரத்தின் பொருள்களை விளக்குவதில் நம்பிள்ளை விற்பன்னராக விளங்கினார். நம்பிள்ளையின் திருவாய்மொழிப் பாசுர விளக்கங்களைக் கேட்க நாள்தோறும் பெருங்கூட்டம் கூடியது.

இவ்வாறு இருக்க, ஒரு நாள், நாடாளும் மன்னன் திருவரங்கப் பெருமாளை வணங்கத் திருக்கோயிலுக்கு வந்தான். திருவரங்கப் பெருமாளின் சன்னிதியில் நின்ற போது, அங்கே அர்ச்சகரைத் தவிர்த்து வேறு ஒருவருமே இல்லை! "என்ன இது! எப்பொழுதுமே பலர் கூடி இருக்கும் இந்தத் தெய்வீக இடத்தில் இன்று ஒருவரும் இல்லையே!" என்று அரசன் அர்ச்சகரிடம் வினவ, அர்ச்சகரும், "நம்பிள்ளை அருளும் திருவாய்மொழியின் ஆழ்பொருள்கள் என்ற ஆராவமுதத்தைப் பருகியவர்கள் திருவரங்கப் பெருமாளையும் இரண்டாம் பட்சமாகவே கருதி இருப்பர்!" என்றார். நம்பிள்ளை திருவாய்மொழிப் பாடங்கள் நடத்தும் இடத்திற்கு அரசன் சென்று, அங்கே கூட்டம் அலைமோதிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தான்.

மற்றொரு நாள், அரசன் திருக்கோயிலுக்கு வந்த போது. பெரியதொரு கூட்டம் கலைந்து சென்றுகொண்டிருந்தது. அரசன், "இது நம்பெருமாள் கோட்டியா அல்லது நம்பிள்ளை கோட்டியா?" என்று வினவினான் - அதாவது, 'நம்பெருமாள்' என்பது திருவரங்கப் பெருமாள் உற்சவரின் திருநாமம். "இவர்கள் எல்லோரும் திருவரங்கப் பெருமானை வணங்கிய பின் கலைந்து செல்கின்றனரா? அல்லது நம்பிள்ளையின் திருவாய்மொழி ஆழ்பொருள் பாடங்களைக் கேட்ட பின் கலைந்து செல்கின்றனரா?" என்று அரசன் வினவியுள்ளான்.

இவ்வளவு ஏன்? திருவரங்கப் பெருமானே நம்பிள்ளை அருளும் திருவாய்மொழிப் பாசுரப் பொருள்களைக் கேட்க ஆசை கொண்டு, ஒரு நாள், தனது சன்னிதையை விட்டு வெளியே வர முயல, எம்பெருமானுக்குத் தீப்பந்தத்தைப் பிடிக்கும் திருவிளக்குப்பிச்சன் என்ற அடியார் ஒருவர், "திருவரங்கப்பெருமானே! தாங்கள் இப்படி வெளியே நடந்து வந்தால், 'இது பேயோ!' என்று அனைவரும் நடுங்கி ஓடி விடுவர்! கலியுகத்தில் இப்படி எல்லாம் செய்ய வேண்டாம்! உள்ளே போய் ஆதிசேடன் மீது கிடந்த திருக்கோலத்திலேயே அருள் பாலியுங்கள்!" என்று கூறவே, அடியார்கள் சொற்படி நடக்கும் திருவரங்கப் பெருமாள் அமைதி காத்தார். அந்த அளவிற்கு நம்பிள்ளையின் திருவாய்மொழிப் பாசுர விளக்கங்கள் மிகவும் புகழ் பெற்று விளங்கின!

"நீர் உலகத்திற்கே ஆசாரியன்!"

இப்படி வானம் போல எங்கும் பரவி இருந்த நம்பிள்ளையின் புகழைக் கண்டு சிலருக்கு முதலில் வருத்தம் இருந்தது. அவர்களுள் ஒருவர் இராமானுசரின் அணுக்கத் தொண்டரான முதலியாண்டான் என்ற மகானின் பிள்ளை வயிற்றுப் பேரனார் - அவரது திருநாமம் கந்தாடைத் தோழப்பர் என்பதாகும். "நமது விளக்கங்களுக்கு இவ்வளவு கூட்டம் கூடவில்லையே!" என்று அவருக்கு வருத்தம் இருந்தது.

ஒரு நாள், கந்தாடைத் தோழப்பர் நம்பிள்ளையைத் திருவரங்கம் திருக்கோயிலின் உள்ளே சந்திக்க நேர்ந்தது. பல நாள்களாக அவர் மனதில் கொதித்துக் கொண்டிருந்த வருத்தமானது கோபமாக வெடித்தது. நம்பிள்ளையை ["நீ, வா, போ" என்று] ஏகவசனத்தில் கந்தாடைத் தோழப்பர் ஏசத் தொடங்கினார்! நம்பிள்ளை ஒன்றுமே பேசாமல் மரம் போல நின்று கொண்டிருந்தார். அவரது சீடர்கள் கந்தாடைத் தோழப்பரிடம் வாதிடத் தொடங்கிய போதும் நம்பிள்ளை அவர்களைத் தடுத்துவிட்டார்.

அப்போது இரவு நேரம் தொடங்கியிருந்தது. கந்தாடைத் தோழப்பர் தம் மனதில் உள்ள கோபத்தை எல்லாம் நம்பிள்ளையிடம் கொட்டித் தீர்த்து, தமது இல்லத்திற்குச் சென்றார். அவரது இல்லத்தரசியார் வழக்கமாக அவருக்குச் செய்யும் பணிவிடைகள் எதையுமே செய்யாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். வியப்புற்ற கந்தாடைத் தோழப்பர், "பெண்மணியே! உனக்கு என்ன ஆயிற்று?" என்றார். அவரோ, "திருமணத்தின் போது எனது தந்தையார் எனது உடலை உமக்குத் தானம் செய்தார். ஆனால், எனது ஆன்மாவோ ஆழ்வாரின் அவதாரம் போன்ற ஆசாரியர் நம்பிள்ளையின் திருவடிகளில் அடிமை பூண்டது. இந்த உடலை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். நம்பிள்ளையிடம் குற்றம் புரிந்த உம்மிடம் எனக்குத் தொடர்பு இல்லை," என்று நேரடியாகக் கூறிவிட்டார்!

இயற்கையிலேயே நல்ல குணங்கள் படைத்த கந்தாடைத் தோழப்பருக்கு இதைக் கேட்டதும் கோபம் வரவில்லை. சற்று சிந்தித்துப் பார்த்து, தமது இல்லத்தரசியார் கூறிய சொற்களில் நியாயமும், நேர்மையும் இருப்பதை உணர்ந்தார். "இப்போது என்ன செய்வது?" என்று கேட்டார்! அந்த அம்மையாரும், "நம்பிள்ளை திருவடிகளில் மன்னிப்பு வேண்டுவதைத் தவிர வேறு என்ன இருக்கிறது?" என்றார். "ஆகில், நீயும் என்னுடன் வருவாய்!" என்று கந்தாடைத் தோழப்பர் கூற, இருவரும் தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு, நம்பிள்ளையின் இல்லத்தை நோக்கிச் செல்லத் தங்கள் இல்லக்கதவைத் திறந்தனர்.

வாசல் திண்ணையில், தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஒருவர் படுத்திருந்தார். "யாரப்பா நீ?" என்று கந்தாடைத் தோழப்பர் கேட்க, அவரும் அடித்துப் பிடித்து எழுந்து வணங்கி நிற்க, தீப்பந்தத்தை அவர் முகத்தின் அருகே கொண்டு சென்ற பின் கந்தாடைத் தோழப்பருக்குப் புரிந்தது - வந்தவர் நம்பிள்ளை! சற்று அதிர்ந்த கந்தாடைத் தோழப்பர், "என் மீது கோபம் கொண்டு என்னைச் சாட இங்கே வந்தீரா?" என்று வினவினார். அடுத்த கணமே, நம்பிள்ளையின் சிரம் கந்தாடைத் தோழப்பர் திருவடிகளில் இருந்தது! "தங்களது திருவுள்ளம் வருந்தும் வண்ணம் இவ்வளவு நாள்களாக அடியேன் இருந்துவிட்டேன். தாங்கள் அடியேனைப் பொறுத்தருள வேண்டும். தங்கள் வாசல் திண்ணையில் கிடப்பதை விட அடியேனுக்கு வேறு புகல் உண்டோ?" என்று மிகவும் வருத்தத்துடன் நம்பிள்ளை கந்தாடைத் தோழப்பரிடம் மன்னிப்பு வேண்டினார்!

இதைக் கேட்ட கந்தாடைத் தோழப்பருக்குத் திருவுள்ளம் நீராய் உருகியது. "அடடா! புகழின் உச்சத்தில் இருக்கும் இவர் நமக்கு ஒரு குற்றமும் புரியவில்லை. நாம் அன்றோ இவருக்கு மனதாலும் சொல்லாலும் தீங்கு இழைத்தோம்! ஆனால், இவர் அதையும் தன் மீது ஏற்றிக்கொண்டு பணிவின் எல்லையில் இருந்து பேசுகிறாரே!" என்று மிகவும் வியப்படைந்தார். அப்போது, கந்தாடைத் தோழப்பர், தமது உளமார, "இவ்வளவு நாள்களாக இந்த ஊருக்குத் தாங்கள் ஆசாரியராக இருக்கிறீர் என நினைத்தேன். ஆனால், இன்று தான் உணர்ந்தேன் - தாங்கள் இந்த ஊருக்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே ஆசாரியன்!" என்று முழங்கினார். கந்தாடைத் தோழப்பரும் அவரது இல்லத்தரசியாரும் நம்பிள்ளையின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். "தாங்களே அடியோங்களுக்கு ஆசாரியனாய் இருந்து அருள வேண்டும்," என்று கந்தாடைத் தோழப்பர் மன்றாடினார். அன்றிலிருந்து, நம்பிள்ளைக்கு 'உலகாரியன்' என்ற சிறப்புத் திருநாமம் ஏற்பட்டது.

'நம்பிள்ளை உலகாரியன்' என்ற அந்தத் திருநாமத்தையே நம்பிள்ளையின் சீடர் ஒருவர் தம்முடைய திருமகனாருக்குப் 'பிள்ளை உலகாரியன்' என்ற பெயராகச் சூட்டினார். அந்தப் பிள்ளை உலகாரியனே நாம் சென்ற பதிவில் கொண்டாடி மகிழ்ந்த விளாஞ்சோலைப்பிள்ளையின் ஆசாரியன் ஆகிய பிள்ளைலோகாசாரியர். அவரே 1323-ல் திருவரங்கத்தில் துருக்கர்களின் வெறி பிடித்த தாக்குதலின் போது திருவரங்கப் பெருமாளைக் காத்துக் கொடுத்தவர்! இராமானுசருக்குப் பிறகும் பற்பல அருமையான ஆசாரியர்கள் இராமானுச சித்தாந்தக் குரு பரம்பரைக்கு அணிகலன்களாகத் திகழ்ந்துள்ளார்கள்.



துன்னு புகழக் கந்தாடைத் தோழப்பர் தம் உகப்பால்
'என்ன உலகாரியனோ!' என்று உரைக்க - பின்னை
'உலகாரியன்' எனும் பேர் நம்பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்றும் மேல்



Tuesday, June 25, 2024

விளாஞ்சோலைப்பிள்ளை

Image Source: https://www.koyil.org/




வாழி நலம் திகழ் நாரண தாதன் அருள்
வாழி அவன் அமுத வாய்மொழிகள் – வாழியவே
ஏறு திருவுடையான் எந்தை உலகாரியன் சொல்
தேறு திருவுடையான் சீர்



பிள்ளைலோகாசாரியரின் இறுதிக் கட்டளை

இராமானுசர் வைகுந்தம் எழுந்தருளிய பின், இராமானுசரின் திருவடிகளைத் தொடர்ந்து வந்த குரு பரம்பரையில், பல ஆசாரியர்கள் மிகச் சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்ந்தனர். அப்படிப்பட்ட ஆசாரியர்களுள் ஒருவர் பிள்ளைலோகாசாரியர்.

பிள்ளைலோகாசாரியரைப் பற்றி அன்பர்கள் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது: 1323-ல் துருக்கர்களின் வெறித் தாக்குதலால் திருவரங்கம் மிகப்பெரிய ஆபத்திற்கு உள்ளானபோது, அவ்வமயம் நூற்று ஐந்து வயதைக் கடந்திருந்த பிள்ளைலோகாசாரியர், திருவரங்கம் திருக்கோயில் உற்சவர் பெருமாளை எடுத்துக்கொண்டு, காடு வழியாகச் சென்று அப்பெருமாளைக் காத்துக் கொடுத்தார். அவர் காடு வழியாகச் செல்லும் முன்னரே, திருவரங்கம் கருவறையைக் கல் சுவர் எழுப்பி மூடச் செய்தல், ஸ்ரீரங்கநாயகித் தாயார் திருமேனியை ஒளித்து வைத்தல் போன்ற தொண்டுகளையும் செய்தார். கோடானுகோடி பேரிடிகளுக்குச் சமமான அந்த மிகக் கொடிய கலவரத்தில், பேரன்பாலும், பொங்கும் பரிவாலும் பிள்ளைலோகாசாரியரின் அடியார்கள் சிலர் பிள்ளைலோகாசாரியருடன் சென்றனர்.

காடுகள் வழியாக நெடுந்தூரம் ஓடியும் நடந்தும் சென்ற பிள்ளைலோகாசாரியர் [மதுரைக்கு அருகே உள்ள] ஆனைமலையை அடைந்தார். வயது சென்ற தமது திருமேனி தளர்ந்த நிலையில், தாம் வைகுந்தம் புகும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தார். அவர் அடியார்கள் அவர் அருகே கைகளைக் கூப்பி நின்றுகொண்டிருந்தனர்.

அந்த நிலையில், "இராமானுசரின் சித்தாந்தத்தை நன்கு காத்து, அதனை எல்லோருக்கும் நன்கு உபதேசிக்க அடுத்த ஆசாரியரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே," என்று எண்ணிய பிள்ளைலோகாசாரியர், திருமலையாழ்வார் என்ற தமது இளம் அடியார் ஒருவரை நினைவு கூர்ந்தார். இந்தத் திருமலையாழ்வார் அப்பொழுது குழந்தைப் பருவத்தில் இருந்தவர்! பிள்ளைலோகாசாரியரின் அடியார்களுள் ஒரு மிகச் சிறந்த அடியார் சாத்விகை அம்மையார் என்கிற பெண்மணி. அந்த அம்மையாரின் செல்வக் குழந்தையே திருமலையாழ்வார். சாத்விகை அம்மையார் திருமலையாழ்வாரை, மிகச் சிறு வயதிலேயே, பிள்ளைலோகாசாரியரிடம் திருவிலச்சினை [ஸ்ரீவைணவ தீட்சை] பெறும்படிச் செய்திருந்தார்.

பிள்ளைலோகாசாரியர் தம் அருகே நின்றுகொண்டிருந்த அடியார்களுள் கூரகுலோத்தமதாசர், நாராயண தாதர், திருக்கண்ணங்குடிப் பிள்ளை, திருப்புட்குழி ஜீயர் ஆகிய சில அடியார்களை நோக்கி, "பிள்ளைகாள்! யாம் பரமபதம் [வைகுந்தம்] செல்ல இருக்கின்றோம். இராமானுசரின் சித்தாந்தத்தைக் கட்டிக் காக்க இளம் திருமலையாழ்வாரை நீங்கள் எல்லோரும் பயிற்றுவிக்கவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறப்பான இரகசிய ஆழ்பொருளை அவருக்கு அறிவிக்க வேண்டும்," என்று அருளி, ஒவ்வொருவரும் கற்பிக்கவேண்டியவற்றை அருளினார். பிறகு, "கூராகுலோத்தமதாசரே! நீரே திருமலையாழ்வாருக்கு இராமானுச சித்தாந்தத்தின் அடிப்படைக் கல்வி யாவற்றையும் கற்பித்து, மற்றவரிடமும் அவர் சென்று பயிலும்படி வழிநடத்தவேண்டும். நாராயண தாதரே! நீர் திருவனந்தபுரத்தில் வசித்து அங்கு அருள் பாலிக்கும் திருவனந்தபத்மநாபப் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடி இரும். திருப்புட்குழி ஜீயரே! திருப்புட்குழி எம் போரேறு பெருமாளுக்குப் பல்லாண்டு பாடி இரும். திருக்கண்ணங்குடிப் பிள்ளையே! திருக்கண்ணங்குடிப் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடி இரும்," என்று ஒவ்வொரு அடியாருக்கும் ஒரு முக்கிய கட்டளையை அருளினார். அதன் பின், திருவரங்கனிடம் உத்தரவு பெற்றுக்கொண்ட பிள்ளைலோகாசாரியர் வைகுந்தம் புகுந்தார்.

சிலந்தி வலைகளுக்குள் ஒரு ஒப்பற்ற வைரக்கல்!

பிள்ளைலோகாசாரியர் பரமபதம் எழுந்தருளிய பின், பிள்ளைலோகாசாரியர் தமக்கு அருளிய இரண்டு திருக்கட்டளைகளையும் சிறமேற்கொண்ட நாராயண தாதர் திருவனந்தபுரம் எழுந்தருளினார். திருவனந்தபுரத்தில் விளாம்பழ மரங்கள் நிறைந்திருந்த ஒரு அமைதியான பசுஞ்சோலையில் ஒரு சிறு குடிசையை அமைத்துக்கொண்டார்.

நாராயண தாதர் ஈழவர் குலத்தில் தோன்றியவர். ஆதலால், அந்தக் காலத்து வழக்கத்தின் படி, அவர் திருக்கோயில் உள்ளே செல்லவில்லை. "திருவனந்தபுரம் அனந்தபத்மநாபப் பெருமாளுக்குப் பல்லாண்டு பாட வேண்டும்," என்று பிள்ளைலோகாசாரியர் தமக்கு அருளியிருந்ததால், தாம் வசித்த சோலையில் உள்ள ஒரு விளாம்பழ மரத்தின் கிளைகளில் ஏறி அமர்ந்து, அங்கிருந்து திருவனந்தந்தபுரம் திருவனந்தபத்மநாபப் பெருமாள் திருக்கோயிலின் திருக்கோபுரத்தைத் தரிசித்து வணங்குவார். தமது ஆசாரியரின் திருக்கட்டளைப் படி, திருவனந்தபுரம் திருவனந்தபத்மநாபப் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடுவார்.

அக்காலத்தில் 'பிள்ளை' என்ற சொல்லை மதிப்பிற்குரிய ஒருவரை அழைக்கப் பயன்படுத்தினர். நாராயண தாதரின் நற்குணங்களால் கவரப்பட்ட எல்லோரும் அவரை 'விளாஞ்சோலைப் பிள்ளை' என்றே அழைக்கத் தொடங்கினர். நாளடைவில், அந்தத் திருநாமமே அவருக்கு அடையாளம் ஆயிற்று! விளாஞ்சோலைப் பிள்ளையின் திருவடிகளில் சில சீடர்களும் வந்தடைந்தனர்.

ஒவ்வொரு நாளும், சில மணி நேரங்களுக்கு விளாஞ்சோலைப் பிள்ளை தியானத்தில் மூழ்குவார். அவரது தியானத்தின் இலக்கு ஒன்றே - தமது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ஆசாரியரான பிள்ளைலோகாசாரியர், திருவரங்கத்துத் திருக்கோயிலில், ஆள் நடமாட்டம் பெரிதாக இல்லாத ஒரு இடத்தில், தமது அணுக்கத் தொண்டர்களுடன் அமர்ந்து, தொண்டர்களுக்கு இரகசிய ஆழ்பொருள்களின் உபதேசங்களைச் செய்யும் அந்தக் காட்சி. விளாஞ்சோலைப்பிள்ளையும் பிள்ளைலோகாசாரியரது அணுக்கத் தொண்டர்களுள் ஒருவர் என்பதால், அவரது திருவுள்ளத்திற்கு மிகவும் இனியதான அந்தக் காட்சி அவரது திருவுள்ளத்திரையில் பசுமையான ஓவியம் போலே தெள்ளத் தெளிவாகப் பதிந்து இருந்தது. [குறிப்பு: விளாஞ்சோலைப் பிள்ளையின் தியானக் காட்சியின் ஓவிய வடிவமே இக்கட்டுரையின் முகப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.]

பல முறை, அந்தக் காட்சியின் தியானத்தில் விளாஞ்சோலைப்பிள்ளை தன்னிலையை மறந்து விடுவார். அதிலிருந்து அவர் மீண்டு வருவதற்குப் பல வாரங்கள் ஆகிவிடும். அன்னம், தண்ணீர், உறக்கம், இரவு, பகல், வெயில், மழை என ஒன்றையுமே உணராது, அந்தக் காட்சியைத் தியானித்தபடி இருப்பார்! சிலந்திகள் அவரது திருமேனியின் மீது வலைகள் பலவற்றைப் பின்னிவிடும். அதையும் உணராமல் விளாஞ்சோலைப்பிள்ளை தமது ஆசாரிய தியானத்தில் மூழ்கி இருப்பார்!! சில வாரங்கள் சென்ற பின், தியானத்திலிருந்து மீண்டு, பல நாள்கள் கடந்துவிட்டதை உணர்ந்து, எழுந்து, நீராடி, தமது ஆசாரியர் இட்ட திருக்கட்டளையான திருவனந்தபத்மநாபப் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடும் தொண்டைச் செய்வார். சீடர்களுக்கு நல்லுபதேசங்களை அருள்வார். இப்படியே ஆண்டுகள் பல உருண்டோடின.

பிள்ளைலோகாசாரியர் தமக்கு இட்ட இரண்டாவது திருக்கட்டளையை நிறைவேற்ற விளாஞ்சோலைப்பிள்ளை காத்திருந்தார். தக்கதொரு தருணத்தில், கூராகுலோத்தம தாசர் திருமலையாழ்வாரைத் தம்மிடம் அனுப்பி வைப்பார் என விளாஞ்சோலைப்பிள்ளை நன்றாகவே அறிந்திருந்தார்.

கூரகுலோத்தமதாசர் காட்டிய நல்வழி

கூரகுலோத்தமதாசர் தமது ஆசாரியர் அருளியதைச் சிரமேற்கொண்டு, தக்க காலம் கனியும் வரை பொறுமை காத்து, தொடக்கத்தில் ஆன்மீகத்தில் பெரும் ஈடுபாடு இல்லாதிருந்த திருமலையாழ்வாரைத் திருத்தி, அவருக்கு அடிப்படை ஞானத்தை அறிவித்தார்.

அதன் பின், ஒரு நாள், "பிள்ளாய்! பிள்ளைலோகாசாரியர் நமக்கு அருளிய உபதேசங்களிலேயே தனிச்சிறப்பு வாய்ந்த இரகசிய நூல் 'ஸ்ரீவசனபூஷணம்' என்பதாகும். திருவனந்தபுரத்தில் நாராயண தாதர் என்ற பிள்ளைலோகாசாரியரின் மெய்யடியார் ஒருவர் எழுந்தருளியுள்ளார். அவர் அந்நூலில் மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றவர். அவரிடம் சென்று பணிந்து, அந்த ஈடு இணையற்ற நூலின் ஆழ்பொருள்களைக் கற்பாய்," என்று கூரகுலோத்தமதாசர் திருமலையாழ்வாருக்கு நல்வழி காட்டியருளினார்.

ஸ்ரீவசனபூஷணம் & சப்தகாதை - ஒரு சிறு அறிமுகம்

பிள்ளைலோகாசாரியர் அருளிய பதினெட்டு இரகசிய நூல்களில் 'ஸ்ரீவசனபூடணம்' என்ற பெயர் சூட்டப்பட்ட நூலே மிகச் சிறந்த இரகசிய நூலாகும். ஆழ்வார்கள் வேதத்தின் சாரத்தைப் பாசுர வடிவத்தில் அருளினார்கள். ஸ்ரீவசனபூடணம் என்ற நூல் ஆழ்வார்களின் பாசுரங்களின் இரகசிய ஆழ்பொருள்களைச் சூத்திரங்களின் வடிவத்தில் வெளிப்படுத்தும். அந்தச் சூத்திரங்களை வாசித்தவுடன் பொருள் புரிந்துவிடாது! அவை மிகக் கடினமான நடையில் உள்ள குறுஞ்சூத்திரங்கள். ஒரு தக்க ஆசாரியரிடம், பணிவன்போடு அவருக்குச் சேவை செய்து, அவர் அருளால் கற்றால் ஒழிய இந்நூலைச் சரியாகப் புரிந்துகொள்வது இயலாத ஒன்று.

பிள்ளைலோகாசாரியரின் திருவடிகளின் மீது மாசற்ற அன்பைப் பொழிந்த விளாஞ்சோலைப்பிள்ளை, ஸ்ரீவசனபூடண சூத்திரங்களின் ஆழ்பொருள்களை நன்கு கற்றுணர்ந்து, அதற்கேற்ப வாழ்ந்து கொண்டு, அந்தச் சூத்திரங்களின் சாரத்தை ஏழு பாசுரங்கள் கொண்ட 'சப்த காதை' என்ற துதியாகவும் வடித்தார். இராமானுச சித்தாந்தத்தின் அடியார்களுக்குத் தினமும் ஓத வேண்டிய துதிகளுள் சப்த காதையும் ஒன்று. 'ஆசாரியரின் திருவடிகளே பெற்றற்கரிய பெரும்பேறு,' என்றே சப்த காதை முழங்குகிறது.

திருமலையாழ்வார் ஸ்ரீவசனபூஷணம் கற்றார்

திருமலையாழ்வாரும் திருவனந்தபுரம் எழுந்தருளி, "நாராயண தாதர் என்ற பெரியோரின் திருமாளிகை எங்கே?" என்று அங்கு உள்ள திருத்தலத்தாரிடம் விசாரித்துக் கொண்டு, விளாஞ்சோலைக்கு வந்து சேர்ந்தார். அங்கே பல சிலந்தி வலைகளுக்குள் விளாஞ்சோலைப்பிள்ளை ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டு, பெருமதிப்புடனும் வியப்புடனும் பணிவுடனும் அவர் அருகே சென்று, அவர் திருவடிகள் முன் வேரற்ற மரம் என விழுந்து வணங்கி, அவர் அருகே கைகளைக் கூப்பி நின்று, மௌனமாகக் காத்திருந்தார்.

சிறிது நேரம் சென்ற பின், விளாஞ்சோலைப்பிள்ளை தமது திருக்கண்களைத் திறந்தார். சிலந்தி வலைகளை விலக்கி, திருமலையாழ்வாரை நோக்கி, "அப்பனே! நீ யார்? எதற்காக வந்தாய்?" என்று வினவினார். திருமலையாழ்வார் உடனேயே தாம் யார் என்பதையும், கூராகுலோத்தம தாசர் தம்மை அங்கே அனுப்பியதையும் விளாஞ்சோலைப்பிள்ளையிடம் கைகளைக் கூப்பிய வண்ணம் விண்ணப்பம் செய்தார். விளாஞ்சோலைப்பிள்ளையும் புன்முறுவல் செய்து, திருமலையாழ்வாருக்கு ஸ்ரீவசனபூஷணம் இரகசிய நூலின் ஆழ்பொருள்கள் யாவற்றையும் கற்பித்தார். தாம் அருளிய சப்த காதையையும் கற்பித்து அருளினார்.

திருவனந்தபத்மநாபனின் திருவுள்ளம்

ஒரு நாள், திருவனந்தபுரம் திருக்கோயிலில் நம்பூத்ரிமார்கள் கருவறையில் திருவனந்தபத்மநாபப் பெருமாளுக்குப் பூசைகள் செய்து கொண்டிருந்தபோது, திருவனந்தபத்மநாபப் பெருமாள் திருவடிகளின் அருகே விளாஞ்சோலைப்பிள்ளையைக் கண்டனர்!! "அட! இவர் எப்படி ஆகம விதிகளை மீறிக் கருவறையின் உள்ளே வந்தார்?!" என்று அதிர்ச்சி அடைந்த நம்பூத்ரிமார்கள், "திருக்கோயிலைச் சுத்தம் செய்யவேண்டும்!" என்று திருக்கோயிலுக்கு வெளியே சென்று, திருக்கதவைத் தாளிட்டனர்.

அவ்வமயம், விளாஞ்சோலைப்பிள்ளையின் அடியார்கள் அங்கே எழுந்தருளினர். அவர்களுள் சிலர் 'இராமானுச நூற்றந்தாதி' துதியை ஓதிக் கொண்டிருந்தனர். "எங்கள் ஆசாரியர் விளாஞ்சோலைப்பிள்ளை பரமபதம் எழுந்தருளி, அவரது ஆசாரியன் திருவடியை அடைந்தார். அவரது திருமேனிக்கு இறுதி மரியாதைகள் செய்வதற்குத் திருவனந்தபுரத்துப் பெருமாளின் திருமாலை முதலிய பிரசாதங்களை எங்களுக்கு அருள்வீர்," என்று அவர்கள் நம்பூத்ரிமார்களை வேண்டினார்கள்!

மிகவும் வியப்படைந்த நம்பூத்ரிமார்கள், விளாஞ்சோலைப்பிள்ளை பரமபதம் புகுந்த காட்சியையே, விளாஞ்சோலைப்பிள்ளை கருவறையின் உள்ளே வந்து தமது திருவடிகள் அருகே நிற்பதைப் போலத் திருவனந்தபத்மநாபப் பெருமாள் அவர்களுக்குக் காண்பித்தார் என்பதை உணர்ந்து கொண்டனர். நடந்தவற்றையெல்லாம் விளாஞ்சோலைப்பிள்ளையின் அடியார்களுக்குத் மனமுருகித் தெரிவித்தனர். திருவனந்தபத்மநாபப் பெருமாள் பிரசாதங்களை விளாஞ்சோலைப்பிள்ளையின் அடியார்களுக்குக் கொடுத்தனர். எல்லோரும் விளாஞ்சோலைப்பிள்ளையின் மொழியைக் கடக்கும் பெருமையை உணர்ந்து போற்றினர்.

"பிள்ளைலோகாசாரியரின் திருவடிகளே பெற்றற்கரிய பெரும்பேறு. அவரது திருவுள்ளத்தின் உகப்புக்குத் தொண்டுகள் புரிவதே எனது ஜீவனின் ஒரே இலக்கு," என்பதே விளாஞ்சோலைப்பிள்ளையின் தாரக மந்திரம். இந்தக் காரணத்தினாலேயே திருவனந்தபத்மநாபப் பெருமாள் விளாஞ்சோலைப்பிள்ளையைத் தமது திருவுள்ளத்தில் வைத்துக் கொண்டாடினார். அதை மற்றவரும் காண வெளிப்படுத்தினார்.

திருமலையாழ்வாரின் திருத்தொண்டு

விளாஞ்சோலைப்பிள்ளை பரமபதம் அடைந்த செய்தி திருமலையாழ்வாருக்கும் தெரிவிக்கப்பட, அவர் வெகு விரைவாகத் திருவனந்தபுரம் எழுந்தருளி, விளாஞ்சோலைப்பிள்ளைக்கு இறுதிச் சடங்குகள் யாவற்றையும் விமரிசையாகச் செய்து முடித்தார். விளாஞ்சோலைப்பிள்ளையின் பெருமைகளைப் போற்றும் வடமொழிக் குறுந்துதிகளும், தமிழ்ப் பாசுரம் ஒன்றையும் திருமலையாழ்வார் இயற்றினார். திருமலையாழ்வார் இயற்றிய அந்தத் தமிழ்ப் பாசுரமே இக்கட்டுரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பு: இந்த அற்புதமான வரலாற்று நிகழ்வுகள் யாவையும் 'யதீந்த்ரப்ரவண ப்ரபாவம்' என்ற வெகு முக்கியமானதொரு நன்னூலில் பிள்ளைலோகம் ஜீயர் என்ற ஆசாரியரால் அருளப்பட்டுள்ளது. இவரே விளாஞ்சோலைப்பிள்ளை அருளிய சப்தகாதையின் விளக்க உரையையும் வரைந்துள்ளார்.



வாழி நலம் திகழ் நாரண தாதன் அருள்
வாழி அவன் அமுத வாய்மொழிகள் – வாழியவே
ஏறு திருவுடையான் எந்தை உலகாரியன் சொல்
தேறு திருவுடையான் சீர்



Thursday, June 13, 2024

இலட்சுமி வரதாரியரும் இராமானுசரும்

Image Source: https://www.tamilbrahmins.com/




பூமகள் கோன் தென்னரங்கர் பூங்கழற்குப் பாதுகமாய்த்
தாம் மகிழும் செலவச் சடகோபர் - தேமலர்த் தாட்கு
ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ்



மெய்யடியார்களைத் தேடி வந்த இராமானுசர்

பெருந்தேவி மணாளனான பேரருளாளப் பெருமாள் [வரதராஜப் பெருமாள்] அருள் பாலிக்கும் திருத்தலம் திருக்கச்சி [காஞ்சிபுரம்]. அந்தத் திருத்தலத்திற்கு அருகே ஒரு ஊரில், வரதாரியர் என்பவரும் அவரது இல்லத்தரசியான இலட்சுமி அம்மையார் என்பவரும் வாழ்ந்து வந்தனர். இந்தத் தம்பதியினர் இராமானுசரின் திருவடிகளில் சரண் புகுந்த அடியார்கள்.

இலட்சுமி அம்மையாருக்கு உடுத்துவதற்கு மேலாடை கூட இல்லாத நிலையில் அவர்கள் இருந்தனர். இருப்பினும், இராமானுசரின் திருவடிகளில் மிகவும் பக்தி பூண்டவர்களாய், இராமானுசர் கற்பித்த மந்திரத்தைத் தினமும் தியானித்து வந்தனர். அந்தணர் குலத்தைச் சேர்ந்த வரதாரியர், உஞ்சவிருத்தி என்ற முறைப்படி, அன்று கிடைத்த தானியங்களைக் கொண்டு வர, அவற்றை இலட்சுமி அம்மையார் சமைத்து, அந்த அன்னத்தை அவர்கள் இல்லத்தில் [விக்கிரக வடிவத்தில்] எழுந்தருளியிருக்கும் திருமாலுக்குப் படைத்து, அதன் பின் அதைப் பிரசாதமாக உண்பர். இதை இராமானுசரின் திருவுள்ளம் மகிழ்வதற்குச் செய்யும் தொண்டாகவே செய்து வந்தனர்.

இவ்வாறு இருக்க, திருவரங்கத்தில் எழுந்தருளியிருந்த இராமானுசர், திருவேங்கட யாத்திரைக்கு அடியார்களுடன் புறப்பட்டார். வழியில், திருக்கச்சியில் வாழ்ந்து வந்த தமது அடியாரான வரதாரியருடைய குடிசையின் வாசலில் எழுந்தருளினார்! "வரதா! உள்ளே இருக்கின்றாயா?" என்று இராமானுசர் அழைப்பு விடுத்தார். அப்போது வரதாரியர் உஞ்சவிருத்திக்காக வெளியே சென்றிருந்த வேளை. இராமானுசரின் கம்பீரக் குரலைக் கேட்ட இலட்சுமி அம்மையார், "நமது ஆசாரியர் இராமானுசர் எழுந்தருளியுள்ளார்!" என்று உடனே உணர்ந்து கொண்டார். ஆனால், மேலாடை இல்லாத நிலையில், அவரால் வெளியே வந்து இராமானுசரையும், இராமானுசரது அடியார்களையும் வரவேற்க இயலவில்லை.

குறிப்பை உணர்ந்த இராமானுசர்

"நாம் எந்த விடையும் அளிக்காமல் இருந்தால் 'உள்ளே எவரும் இல்லை போலும்,' என எண்ணி இராமானுசர் இங்கிருந்து புறப்பட்டு அருள்வார்! நமது ஆத்மாவைக் கடைத்தேற்றவல்ல பொற்கற்பக ஆசாரியர் அவரது அடியார்களுடன் எழுந்தருளியுள்ளார்! அவர்களுக்குத் தொண்டு புரியும் பெரும்பேற்றை இழப்போம் அல்லவா?" என்று வருந்திய இலட்சுமி அம்மையாருக்கு ஒரு வழி தோன்றியது. தமது இரு கைகளையும் தட்டி உள்ளே தான் இருப்பதைக் குறிப்பால் இராமானுசருக்கு உணர்த்தினார்!

ஒரு நொடிப்பொழுதில், இராமானுசர் அந்தக் குறிப்பின் பொருளை உணர்ந்து கொண்டு, தமது காவி மேலாடையைக் குடிசைக்கு உள்ளே வீசி எறிந்தார்! இலட்சுமி அம்மையாரும் இராமானுசர் அருளிய அந்தக் காவி மேலாடையை ஆசாரியர் அருளிய பிரசாதமாக அணிந்து கொண்டு, வெளியே வந்து, இராமானுசரையும் அவரது அடியார்களையும் தரையில் விழுந்து வணங்கி, உளமாற வரவேற்று, குடிசையின் உள்ளே இளைப்பாற வேண்டினார். வெகு தூரம் நடந்த களைப்பில், அவர்களும் அமர்ந்து இளைப்பாறினர்.

இலட்சுமி அம்மையாரின் உறுதியான முடிவு

இலட்சுமி அம்மையாருக்கு மிகப்பெரிய ஆவல் ஒன்று எழுந்தது: அற்புதமான ஆசாரியரான இராமானுசருக்கும், அவரது அடியார்களுக்கும், நன்கு சமைத்ததும், தூய்மையானதும், மிகவும் சுவையானதுமான அன்னங்களை, அவர்கள் திருவயிறுகளும், திருவுள்ளங்களும் நிறையும் வண்ணம் படைக்க வேண்டும் என்பதே அந்த ஆவல்! அவர்களது குடிசையிலோ ஒரு சிறு தானியமும் இல்லை. பற்பல தின்பண்டங்களைச் சமைப்பதற்குப் பாத்திரங்களும் இல்லை. வரதாரியர் உஞ்சவிருத்தி செய்த பின் கொண்டு வரும் சில தானியங்களைக் கொண்டு இவ்வளவு அடியார்களுக்கும் உணவு படைப்பது என்பது கனவிலும் நடவாத ஒன்று. இந்நிலையில் என்ன செய்ய முடியும்?

இலட்சுமி அம்மையார் சிந்திக்கலானார்: "பரம்பொருளான திருமாலைக் காட்டிலும் அந்தப் பரம்பொருளைக் காட்டித் தந்த குருவான இராமானுசரே சிறந்தவர். அவர் அருளால் அன்றோ இந்தப் பிறவிச்சுழலிலிருந்து மிகவும் தாழ்ந்த அடியேன் போன்றோரும் மோட்சம் அடையப் போகின்றோம்! அவரது அருளுக்குத் தக்கதொரு தொண்டை நம்மால் பதிலுக்குச் செய்யவும் இயலுமோ? இந்த ஒரு சிறிய தொண்டையாவது செய்யவேண்டாமோ? அழியாத என் ஆத்மாவிற்கு நன்மையே பயக்கும் இராமானுசருக்கும், அவரது அடியார்களுக்கும், எப்படியும் அழியப்போகும் எனது தாழ்ந்த உடலை விற்பதினால் குற்றம் ஏதும் இல்லை!" என்று எண்ணி, ஒரு உறுதியான முடிவு செய்தார்.

இராமானுசரின் திருவடியை மறுபடியும் விழுந்து வணங்கி, "ஆசாரியரே! தங்களுக்கும் தங்களது அடியார்களுக்கும் நல்வரவு உண்டாகுக! தாங்கள் கருணை கூர்ந்து இங்கே ஓய்வெடுத்து அருளுங்கள். அடியேன் காய்கறிகள், தானியங்கள், பாத்திரங்கள் போன்றவற்றை வாங்கி வருகிறேன். அடியேனது கணவரான தங்கள் அடியார் விரைவில் தங்களது திருவடிகளில் சிரம் தாழ்த்தி வணங்குவார்," என்று விண்ணப்பம் செய்து, வெளியே புறப்பட்டார்.

இலட்சுமி அம்மையாரின் தூய விருந்தோம்பல்

இலட்சுமி அம்மையார் கடுக நடந்து, அவர்கள் குடிசைக்கு அருகே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு வணிகனிடம் சென்றார். அந்த வணிகனுக்கு இலட்சுமி அம்மையார் குறித்து ஒரு தவறான நோக்கம் இருந்தது. பல முறை அவருக்குச் செல்வங்களைக் காட்டி ஈர்க்க முயன்றான். ஆனால், அவன் முயற்சிகள் எள்ளளவும் பலிக்கவில்லை.

அன்று, இலட்சுமி அம்மையார் அவனைப் பார்த்து, புன்னகை செய்து, கனிவுடன் பேசத் தொடங்கினார்: "உனது நெடுநாள் எண்ணம் இன்று நிறைவேறும். எங்கள் இறைவர் இராமானுசரும் மற்றும் அவரது அடியார்களும் குடிசைக்கு எழுந்தருளியுள்ளார்கள். அவர்களுக்குத் தக்கபடி அன்னம் சமைத்துப் பரிமாறுவதற்குத் தேவையான அனைத்து வகையான நல்ல காய்கறிகள், தானியங்கள், பாத்திரங்கள் போன்றவற்றை அனுப்புவாய்," என உரைத்தார்.

அந்த வணிகனால் தன் காதுகளை நம்பவே முடியவில்லை! "என்னை ஒரு பொருட்டாக என்றும் மதியாதவள் இன்று என்னைத் தேடி வந்து இப்படிப் பேசுகிறாளே! இன்று நிச்சயம் எனது எண்ணம் ஈடேறும்," என எண்ணி, இலட்சுமி அம்மையார் கேட்டவற்றையெல்லாம் அவர்கள் குடிசைக்கு அனுப்பி வைத்தான்.

குடிசைக்கு வந்து சேர்ந்த இலட்சுமி அம்மையாரிடம், "குழந்தாய்! எம்பெருமானுக்குத் திருவாராதனம் [பூசை] செய்ய நேரம் நெருங்குகிறது. யாம் நீராடி வருகிறோம். நீயும் நீராடிய பின், தூய்மையுடன் எம்பெருமானுக்குப் படைக்க வேண்டிய அன்னங்களைச் சமைப்பாய்," என்று அருளிய இராமானுசர், தம்முடைய சில அடியார்களிடம், "பிள்ளைகாள்! நீங்கள் இந்தக் குழந்தைக்கு அன்னம் சமைப்பதில் அனைத்து உதவிகளையும் புரியுங்கள்," என்றும் கட்டளையிட்டு, அருகில் இருக்கும் நீர்நிலையில் நீராட எழுந்தருளினார்.

அந்த அடியார்களும் இலட்சுமி அம்மையாரும் இராமானுசர் அருளியபடியே விரைவில் நீராடி, இராமானுசரின் திருவடிகளைத் தத்தம் மனங்களில் வைத்துப் பூசித்தபடியே, நல்ல அன்னங்களை நன்கு சமைத்தனர். இராமானுசரும் அவருடைய திருவாராதானப் பெருமாளான பேரருளாளப் பெருமாளுக்குத் திருவாராதனம் செய்து, சமைத்த அன்னங்களைச் சமர்ப்பித்தார் [படைத்தார்]. அதன் பின், அந்தப் பிரசாதத்தை இராமானுசரும் உண்டு, அடியார்களும் உண்டனர். எல்லாம் இனிதே நடந்தேறி முடிய, அனைவரும் சற்று இளைப்பாறினர். இராமானுசர் அருளிய நல்லுரைகளைக் கேட்டு இன்புற்று இருந்தனர்.

வரதாரியரின் நெகிழ்ச்சி

அன்று, சற்று நேரம் கடந்த பின், வரதாரியர் குடிசைக்குத் திரும்பினார். அவர் கண்ட காட்சி அவருக்குப் பேரின்பத்தை அளித்தது. கடுகச் சென்று தமது ஆசாரியரையும் அவரது அடியார்களையும் வேரற்ற மரமென விழுந்து வணங்கினார். ஆசாரியருக்கும் அடியார்களுக்கும் விருந்தோம்பல் நன்கு நடந்ததை இலட்சுமி அம்மையாரிடம் அறிந்து மிகவும் வியப்பெய்தினார்.

தக்கதொரு தருணத்தில், தனிமையில், இலட்சுமி அம்மையாரும் தமது அருமைக் கணவரிடம் தான் செய்த யாவற்றையும் விண்ணப்பித்து, வணங்கி நின்றார். இதைக் கேட்ட வரதாரியர் மிகவும் நெகிழ்ந்து போனார். "மங்கையர் குல மணிவிளக்கே! உன்னைப் போன்ற ஒரு ஈடற்ற அடியாரைத் தர்மபத்தினியாகப் பெற்ற அடியேன் மிகப்பெரிய பாக்கியசாலி!" என்று மனமார, வாயார இலட்சுமி அம்மையாரைக் கொண்டாடினார்.

பிறகு, அந்தத் தம்பதியினர் இராமானுசரிடம் சென்று, அவரது திருவடிகளை வணங்கினார்கள். இராமானுசரும் அருள் கூர்ந்து தமது திருவடி தீர்த்தத்தை அவர்களுக்கு அருளினார். பிறகு, இராமானுசரும் மற்ற அடியார்களும் சற்று ஓய்வில் எழுந்தருளியிருக்க, அந்தத் தம்பதியினர் இராமானுசர் அருளிய பிரசாதத்தையும், திருவடி தீர்த்தத்தையும் சிறிதளவு எடுத்துக்கொண்டு, பற்றற்ற மனநிலையுடன் அந்த வணிகனின் இல்லத்திற்குச் சென்றனர். வரதாரியர் வெளியே காத்துக் கொண்டிருக்க, இலட்சுமி அம்மையார் உள்ளே சென்றார்.

இராமானுசரின் இன்னருள்

வணிகனைக் கண்டு, "நீ செய்த பேருதவிக்கு மிக்க நன்றி! எங்கள் தெய்வம் இராமானுசர் அருளிய பிரசாதங்களை முதலில் எடுத்துக் கொள்வாய்," என்று அந்த வணிகனுக்குப் பிரசாதங்களை அளித்தார். அந்த வணிகனும் பிரசாதங்களை உண்டான். அடுத்த கணமே, அந்த வணிகனின் மனதில் ஒரு இமாலய மாற்றம் ஏற்பட்டது! அவன் செய்யவிருந்த தகாத செயலை நினைத்து அவன் கூனிக் குறுகினான். "தாயே! இந்த நீசனை தாங்கள் மன்னித்து அருள வேண்டும்!" என்று அலறி, இலட்சுமி அம்மையாரின் திருவடிகளில் தடி போல விழுந்து வணங்கினான்! அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனைச் சற்றும் எதிர்பாராத இலட்சுமி அம்மையார், வெளியே விரைந்து சென்று நடந்தவற்றை வரதாரியரிடம் விண்ணப்பித்தார். இராமானுசரின் இன்னருளை எண்ணி அந்தத் தம்பதியினர் மிகவும் மனமுருகி இராமானுசரைப் போற்றினர். வரதாரியர் இலட்சுமி அம்மையாருடன் உள்ளே சென்றார். அந்த வணிகன் வரதாரியரை ஏறெடுத்தும் பார்க்க முடியாமல், அவரது திருவடிகளில் விழுந்து மன்னிப்பு வேண்டினான். வரதாரியர் மிகவும் அருள் கூர்ந்து, அந்த வணிகனைத் தேற்றினார். "அப்பனே! எங்களுடன் வருவாய். பெற்றற்கரிய பெருஞ்செல்வத்தைக் காட்டுகின்றோம்!" என்று அருளி, அந்த வணிகனை இராமானுசரிடம் அழைத்துச் சென்றார்.

வரதாரியர் அந்த வணிகனுக்குச் செய்த பரிந்துரையை அருள் கூர்ந்து கேட்ட இராமானுசர், அந்த வணிகனுக்குப் பஞ்ச சம்ஸ்காரம் என்ற ஸ்ரீவைணவ தீட்சையை அருளினார். அந்த வணிகரும் 'இராமானுசன் அடியார்' என்ற பெருமையைப் பெற்றார். ஒப்பற்ற ஆசாரியரான இராமானுசரின் திருவடிகளில் அந்த வணிகர் பற்பல செல்வங்களை அர்ப்பணித்து, அவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்ட, இராமானுசரும் ஏற்றுக்கொண்டு அருளினார்.

அதன் பிறகு, இராமானுசர் அந்தத் தெய்வத் தம்பதியினருக்குப் பேரருள் புரிந்து, தமது அடியார்களுடன் திருவேங்கட யாத்திரையைத் தொடர்ந்தார். பிற்காலத்தில், வரதாரியரும் இராமானுசர் ஏற்படுத்திய 74 சிம்மாசன அதிபதிகளுள் ஒருவர் ஆனார். அவருக்கு "பருத்திக் கொல்லை அம்மாள்" என்ற திருநாமமும் உண்டு. இலட்சுமி அம்மையாருக்கு "பருத்திக் கொல்லை இலட்சுமி" என்ற திருநாமமும் உண்டு.

குறிப்பு: இராமானுசரின் வாழ்க்கை வரலாற்றைப் பகரும் முக்கிய நூல்களுள் ஒன்றான "ப்ரபந்நாம்ருதம்" என்ற நூலில் இந்தப் போற்றுதலுக்குரிய வரலாறு நமக்குச் சான்றோர்களால் அருளப்பட்டுள்ளது.



பூமகள் கோன் தென்னரங்கர் பூங்கழற்குப் பாதுகமாய்த்
தாம் மகிழும் செலவச் சடகோபர் - தேமலர்த் தாட்கு
ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ்



வாழ்த்துப் பாசுரங்கள்




ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்




Image Source: https://srivaishnava.bandcamp.com/album/manavala-mamunigal-650


வாழி திருப்பாவை பாடு மடப்பாவை
வாழி அரங்க மணவாளர் - வாழி அவன்
மாடு நிற்கும் புள்ளரையன் வாழி பெரியாழ்வார்
பாடு நிற்கும் வேதாந்தப் பா

சிறு பொழிப்புரை: திருப்பாவை பாடிய செல்வியான ஆண்டாளும், அந்த ஆண்டாளுடைய மனத்துக்கு இனிய மணாளனான அரங்க மணவாளரும், அந்த அரங்கனின் மாப்பிள்ளைத் தோழனாக அவருடன் ஒரே வேதிகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று கொண்டிருக்கும் புள்ளரையனான கருடாழ்வாரும், இவர்கள் எல்லோருக்கும் பல்லாண்டு பாடிக் கொண்டிருக்கும் பெரியாழ்வார் [ஆண்டாளின் திருத்ததகப்பனார்] திருவாய்மலர்ந்து அருளிய வேதாந்தத்தின் சீரிய சாரத்தைத் தன்னகத்தே கொண்ட 'திருப்பல்லாண்டு' என்ற அருளிச்செயலும் [திவ்யபிரபந்தமும்] எப்போதும் நன்கு தழைத்து வாழட்டும்!



ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
தாழ்வு ஆதும் இல் குரவர் தாம் வாழி - ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து

சிறு பொழிப்புரை: ஆழ்வார்களும், அவர்கள் திருவாய்மலர்ந்து அருளிய நான்காயிரம் பாசுரங்களின் தொகுதியாம் அருளிச்செயல்களும், அந்த ஆழ்வார்கள் அடியொற்றியே வாழ்ந்த இராமானுசரின் வழி வந்த தாழ்வு ஒன்றும் இல்லாத குருமார்களும், அந்தக் குருமார்கள் பேரருளுடன் உரைத்தவைகளான அருளிச்செயல்களின் உரைகள், அவற்றின் இரகசிய ஆழ்பொருள்கள், வடமொழி துதிகள் ஆகிய அனைத்தும் செம்மையான நான்கு மறைகளுடன் சேர்ந்து எப்போதும் நன்கு தழைத்து வாழட்டும்!



பூமகள் கோன் தென்னரங்கர் பூங்கழற்குப் பாதுகமாய்த்
தாம் மகிழும் செலவச் சடகோபர் - தேமலர்த் தாட்கு
ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ்

சிறு பொழிப்புரை: 'பூமகள்' என்று போற்றப்படும் தாமரையாளான ஸ்ரீரங்கநாயகியின் மணவாளன் தென்னரங்கன். அந்தத் தென்னரங்கனுடைய திருவடித்தாமரைகளுக்குப் பாதுகைகளாகத் திகழும் செல்வத்தைப் பெற்ற மகிழ்ச்சியால் திளைப்பவர் 'சடகோபர்' என்று போற்றப்படும் ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார். அந்த நம்மாழ்வாரின் தேன் சிந்தும் திருவடித் தாமரைகளின் இனிய பாதுகைகளாகத் திகழ்பவர் என் ஆத்மாவை உய்வித்த ஞானத் தந்தையான இராமானுசர். என் நெஞ்சமே! அந்த இராமானுசரின் திருவடிகளை அடைந்து வாழ்வாயாக!



வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் - வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை

சிறு பொழிப்புரை: இராமானுசர் துறவறம் ஏற்ற போது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் அவருக்கு 'யதிராஜன்' [துறவிகளின் அரசன்] என்ற திருநாமத்தை அருளினார். அந்த வடமொழிச் சொல்லைத் தமிழில் 'எதிராசன்' என்று வழங்குவர். இங்கு மூன்று நிலைகளில் உள்ள அடியார்கள் பேசப்படுகிறார்கள்: முதல் நிலை - 'வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!' என்று இராமானுசரை வாழ்த்தும் மெய்யடியார்கள்; இரண்டாம் நிலை - அப்படி வாழ்த்தும் மெய்யடியார்களை 'வாழி! வாழி! வாழி!' என்று வாழ்த்தும் இராமானுசருடைய அடியார்க்கு அடியார்கள்; மூன்றாம் நிலை - [இரண்டாம் நிலையில் உள்ள] அந்த இராமானுசரின் அடியார்க்கு அடியார்களை 'வாழி! வாழி! வாழி!' என்று வாழ்த்தும் மெய்யடியார்கள்! [மூன்றாம் நிலையில் உள்ள] "அந்த இராமானுசரின் அடியார்க்கு அடியார்க்கு அடியவர்களின் திருவடிகளை வைகுந்தத்தில் வாழும் விண்ணோர்களும் தங்கள் சிரம் தாழ்த்தி வணங்குவர்!" என்று இராமானுசரின் அடியார்களின் பெருமையை இப்பாசுரம் போற்றுகின்றது.



அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ - கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்!

சிறு பொழிப்புரை: "அடியார்கள், அரங்க நகர், சடகோபன் என்கிற நம்மாழ்வார் அருளிய அருளிச்செயலான 'திருவாய்மொழி' [இந்தத் திவ்ய பிரபந்தம் சாம வேதத்தின் சாரம்], கடலால் சூழப்பட்ட இந்த உலகம் [மற்றும் அதில் வாழும் யாவரும்] வாழ்வதற்கு [இராமானுசரின் மறு அவதாரமான] மணவாள மாமுனியே! தாங்கள் இன்னும் ஒரு நூற்றாண்டு வாழ்வீராக!" என்று ஒவ்வொரு நாளும் ஓதவேண்டிய இந்தப் பாசுரம் முழங்குகிறது.



வாழி இராமானுச மாமுனிவன் மாமலர்த தாள்
வாழி அவன் கருணை மாநோக்கம் - வாழியே
எந்தை மணவாள முனி இன்னருளால் மாறன் இசைச்
செந்தமிழைத் தேர்ந்து உரைக்கும் சீர்

சிறு பொழிப்புரை: "மணவாள மாமுனிகள் திருவடிகளே கதி" என்று வாழ்ந்த வானமாமலை திருமடத்தின் முதல் ஜீயர் [துறவி] 'இராமானுசன்' என்ற திருநாமம் உடையவர். இவர் மணவாள மாமுனிகளின் உயிரான சீடர். அவருடைய பெருமை பெற்ற திருவடித்தாமரைகள், அவருடைய மாபெரும் அருட்பார்வை, அவர் குருவருளால் திருவாய்மொழி மற்றும் அதன் ஆழ்பொருள்களை ஓதும் சீர் - இவை யாவும் எப்போதும் நன்கு தழைத்து வாழட்டும்!



வாழி கலிகன்றி மாமுனிவன் வண்கழல்கள்
வாழி வரைப்புயமும் முக்கோலும் - வாழியே
எந்தை பட்டர்பிரான் பாங்கருளால் மாறன் தன்
செந்தமிழைத் தேர்ந்து உரைக்கும் சீர்

சிறு பொழிப்புரை: வானமாமலை திருமடத்தின் 30-ம் பட்டத்தை அணி செய்த ஜீயரான கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயருடைய திருவடிகள், திருத்தோள்கள், கையில் ஏந்திய த்ரிதண்டம் என்ற முக்கோல், அவருடைய குரு [29-ம் பட்டத்து ஜீயராம் பட்டர்பிரான் ராமானுஜ ஜீயர்] அருளால் திருவாய்மொழி மற்றும் அதன் ஆழ்பொருள்களை ஓதும் சீர் - இவை யாவும் எப்போதும் நன்கு தழைத்து வாழட்டும்!



வாழி மதுரகவி மாமுனிவன் வண்கழல்கள்
வாழி அவன் முக்கோலும் வண்புயமும் - வாழியே
சீர்க் கலியன் இன்னருளால் மாறன் மதுரகவி
தேர்ந்த புகழ் ஈடு உரைக்கும் சீர்

சிறு பொழிப்புரை: வானமாமலை திருமடத்தின் 31-ம் பட்டத்தை அணி செய்யும் ஜீயரான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயருடைய திருவடிகள், கையில் ஏந்திய த்ரிதண்டம் என்ற முக்கோல், திருத்தோள்கள், அவருடைய குரு [30-ம் பட்டத்து ஜீயராம் கலியன் ராமானுஜ ஜீயர்] அருளால் திருவாய்மொழி, நம்மாழ்வாரைப் போற்றும் கண்ணிநுண் சிறுத்தாம்பு மற்றும் அதன் ஆழ்பொருள்களை ஓதும் சீர் - இவை யாவும் எப்போதும் நன்கு தழைத்து வாழட்டும்!



Image Source: Google Search Result [YouTube Screen Grab]





ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்



வினா விடை: "குருவருளால் தழைக்கும் கற்பகத் தருக்கள்!" கட்டுரை

கட்டுரைக்கு ஒரு சிறு அறிமுகம் அடியேனின் சிறு பதிவுகளை வாசித்து வரும் அன்பர்களுள் ஒரு அடியவர் ஸ்ரீ கௌடியா சம்பிரதாயத்தில் ஊற்றம் உள்ள ...